Friday, September 18, 2020

#Periyvacharanam / ஜய ஜய சங்கர/சகல ஜீவராசிகளுக்குள்ளும் அந்த சர்வேஸ்வரன் இருக்கிறான் / Mahaperiyava Saranam

 

பெரியவாள் ஒரு முறை திருக்கோயிலூருக்கு அருகில் உள்ள வசந்த கிருஷ்ணபுரத்தில் முகாமிட்டு இருந்தார்.

 

அது அவர் சாதுர்மாஸ்யவிரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த காலகட்டம். அதனால், தினமும் நீராடிய பிறகு அங்கிருந்து திருவண்ணாமலை சிகரம் இருந்த திசை நோக்கி அவர் பூஜை செய்வது வழக்கம்.

 

அந்த சமயத்தில் ஒருநாள்,வழக்கம்போல அருணைச் சிகரம் நோக்கி ஆராதனை செய்த ஆசார்யர், அதன் பிறகு சற்று நேரம் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

 

பெரும்பாலும் அருணகிரி வழிபாடு முடிந்ததும் முகாமுக்கு உள்ளே சென்றுதான் தியானத்தில் அமரும் மகாபெரியவர் அன்று எதனாலோ வெளியிலேயே தியானத்தில் ஆழ்ந்தார். அந்த சமயத்தில் எங்கிருந்தோ ஒரு நாய் அங்கே வந்தது.

 

நாய் வந்ததையோ அது என்ன செய்கிறது என்பதையோ யாரும் கவனிப்பதற்கு முன்னால் வெகு வேகமாக மகானின் அருகே சென்ற அந்த நாய், அங்கே வைத்திருந்த கமண்டலத்தில் இருந்த நீரில் வாயை வைத்துக் குடிக்கத் தொடங்கிவிட்டது. சில விநாடிகளுக்குப் பிறகே அதை பார்த்த மடத்துப் பணியாளர்கள் பதறிப் போய் விட்டார்கள்.

 

மகானுக்குப் பக்கத்திலேயே நின்ற அதை விரட்ட, சூ ...சூ....என்று அதட்டினார்கள். ஊஹூம்...அது நகர்ந்தபாடில்லை. கொஞ்சம் உரக்கக் கத்தினால், மகானுடைய தியானம் கலைந்துவிடுமோ என்ற பயமும் எழுந்தது எல்லோருக்கும்.

 

அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கல்லை எடுத்து நாயின் மீது எறிந்தார். அடிபட்ட நாய் ஊளையிட்டு கதறிக்கொண்டே அங்கிருந்து ஓடியது. நாயின் குரலைக் கேட்டு தியானத்தில் இருந்து விழித்த மகாசுவாமிகள் நடந்ததை மற்றவர்கள் சொல்லக் கேட்டு அறிந்து கொண்டார்.

 

இவ்வளவு கவனக்குறைவாக இருந்திருக்கிறீர்களே...ஆசாரம் கெட்டுவிட்டதே...! என்றெல்லாம் மகான் கோபம் கொள்ளப் போகிறார் என்று எல்லோரும் நினைக்க, அதற்கு மாறாக, அன்பொழுகப் புன்னகைத்தார் பெரியவர்.

 

தன்னருகே நின்ற அணுக்கத் தொண்டர்களைப் பார்த்து "இங்கே பக்கத்துல உள்ள அக்கிரஹாரத்துல இருக்கிற எல்லா வீடுகளுக்கும் போய், ஒவ்வொரு வீட்டுல இருந்தும் தரக்கூடிய வகையான உணவு வகைகளை சேகரம் பண்ணிக்கொண்டு வாருங்கள். அதோடு ஒரு வாளியில் சுத்தமான ஜலமும், எடுத்துக்கொண்டு வாருங்கள்!" என்று பணிந்தார்.

 

மகான் கேட்கிறார் என்றதும், எல்லோரும் போட்டிபோட்டுக் கொண்டு உணவுப் பண்டங்களைத் தர, அனைத்தையும் தொண்டர்கள் நிறைய பாத்திரங்களில் கொண்டு வந்தனர்.

 

அனைத்தையும் பார்த்த மகான், "எல்லாவற்றையும் அப்படியே வாசலில் கொண்டுவந்து வையுங்கள்!" என்று உத்தரவிட்டார்.

 

அதுவரை எங்கே போனதென்றே தெரியாத அந்த நாய், இப்போது திரும்ப வந்து, ஆசார்யாளின் பார்வை படும் தொலைவில் நின்றது. "இங்கே வா!" என்பதுபோல் அந்த நாயை கைஜாடைகாட்டி அழைத்தார் மகான். அதைப் புரிந்ததுகொண்டதுபோல், வாலை அசைத்தபடியே பவ்யமாக வந்தது அந்த நாய்.

 

பரமாசார்யாளின் சைகை பாஷையைப் புரிந்து கொண்டு அந்த நாய் வந்ததைப் பார்த்த பக்தர்களும், பணியாளர்களும் வியப்படைந்தனர். நெருங்கி வந்த அந்த நாய், அருகே வருவதற்கு பயந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்தது.

 

மகான், தொடர்ந்து அதைக் கூப்பிட்டார். அது தயங்கி, தயங்கி வந்து அருகே அமர்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஏதோ மாயம்போல, அந்தப் பகுதியிலுள்ள நாய்கள் அனைத்தும் அங்கே வந்துவிட்டன. படையாக வந்த நாய்களின் கூட்டம், உணவுப் பொருட்களை துவம்சம் செய்யாமல்,பெரியவாளின் உத்தரவுக்கு காத்துக் கொண்டிருப்பதைப்போல அவரையே சுற்றிச் சுற்றி வந்தன. ஒரு நாய்கூட உணவுப் பொருட்களின் அருகே சென்று முகர்ந்து பார்க்கவோ, வாயை வைக்கவோ செய்யவில்லை.

 

நாய் மீது கல் எறிந்தவரை அழைத்த மகாபெரியவா, "எல்லா உணவுப் பொருளையும் அத்தனை நாய்களுக்கும் பகிர்ந்து போடு!" என்று சைகையில் தெரிவித்தார். அவர் உணவை எடுத்துவைக்கும் வரை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல அத்தனை நாய்களும் கட்டுப்பாடு குலையாமல் நின்றன.

 

அந்த மனிதர் உணவைப் போட்டு முடித்ததும், மகான் நாய்களை நோக்கி சைகை செய்ய, ஒன்று கூட குரைக்கவோ, சண்டை போடவோ செய்யாமல், வரிசையாக நின்று சாப்பிட்டுவிட்டு,பக்கெட்டில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டுச் சென்றன.

 

சகல ஜீவராசிகளுக்குள்ளும் அந்த சர்வேஸ்வரன் இருக்கிறான் என்பதைச் சொல்லாமல் உணர்த்தும் விதமாக மகாபெரியவர் நாய்க் கூட்டத்தை அழைத்து விருந்து கொடுத்த பெருங்கருணையை எண்ணி எண்ணிச் சிலிர்த்துப் போனார்கள் பக்தர்கள்!

 

ஜய ஜய சங்கர!!

ஹர ஹர சங்கர!!

No comments:

Post a Comment

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...