மஹா பெரியவா அற்புதங்கள்
பட்டு பாட்டிக்கு
பெரியவாளின் அனுக்ரஹம்
கும்பகோணத்தை சேர்ந்த
பட்டுப் பாட்டி பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த
தன்னுடைய ரெண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள்.
பெரியவா ஸதாராவில்
முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு
வந்திருந்தாள். நல்ல குளிர்காலம்!
ஒருநாள் காலை தன்னுடைய
பாரிஷதரான பாலு அண்ணாவை அழைத்தார்.....
" இந்தா.....பாலு! இந்தக்
கம்பிளிய கொண்டு போயி, பட்டுப் பாட்டிட்ட
குடு"
"ஸெரி......"வாங்கிக்
கொண்டு போனார். ஆனால் நாள் முழுக்க இருந்த கார்யங்களில், கம்பிளியை குடுக்க மறந்து விட்டார்.
நள்ளிரவாகிவிட்டது!
பெரியவா படுத்துக்
கொண்டுவிட்டார்! பாலு அண்ணா கொஞ்சம் தள்ளி படுத்துக் கொண்டு தூங்கிவிட்டார்!
"பாலு!......"
பெரியவாளின் மதுரக்குரல்
கேட்டு எழுந்து கொண்ட பாலு அண்ணாவிடம்....
"ஏண்டா....பட்டுப்
பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?"
தூக்கிவாரிப் போட்டது!
"ஆஹா! மறந்தே போய்ட்டேனே!...இல்ல
பெரியவா...... மறந்தே போய்ட்டேன்"
பெற்றவளுக்கு மட்டுந்தான்,
தன் குழந்தைகள் எத்தனை தொண்டு கிழமானாலும் அவர்களுடைய
தோற்றத்தைப் பார்க்கத் தெரியாமல்,
எப்போதுமே குழந்தையாகவே
பார்க்க முடியும்!
"ஸெரி.....இப்போவே
போயி, அவ எங்க இருந்தாலும் தேடி
கண்டுபிடிச்சு கம்பிளியை அவட்ட குடுத்துட்டு வா"
"இந்த நடுராத்ரிலயா?
குளிரான குளிர்! எங்க போய் பாட்டியை தேடறது?.....
காலம்பற குடுத்துடறேனே பெரியவா!..."
தெய்வக் குழந்தை அடம்
பிடித்தது!
"இல்ல.....இப்பவே குடுத்தாகணும்!
நீ என்னடா?... ராத்ரிலதான குளிர்
ஜாஸ்தி? பாவம். நடுங்கிண்டிருப்பா!"
கம்பிளியை எடுத்துக்
கொண்டு, அர்த்த ராத்ரியில் வீடுவீடாக
அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக்
கிடக்கும் உருவங்களை எல்லாம் உற்று உற்று பார்த்து, கடைசியில் கபிலேஶ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில்
குளிரில் தன் புடவையை சுருட்டி, முடக்கிக் கொண்டு
கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்துவிட்டார்!
"பாட்டி! ....பாலு....."
"ம்...என்னப்பா?....என்ன வேணும்?.."
தூக்கத்திலிருந்து
முழித்துக் கொண்ட பாட்டியின் காதில் அம்ருதமாக விழுந்தது.... பாலு அண்ணா சொன்னது.....
"பெரியவா....இந்தக்
கம்பிளிய ஒங்ககிட்ட குடுக்கச் சொல்லி காலமேயே சொன்னா..... மறந்தே போய்ட்டேன்! பெரியவா,
இப்போ ஞாபகமா கேட்டா....
குடுக்கலன்னதும்,
ஒடனேயே எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு குடுக்கச்
சொன்னா....."
"பெரியவாளா!!.....என்னப்பனே!
இந்த ஜீவனுக்கும் இப்டியொரு அனுக்ரஹமா!..."
பாட்டி அடைந்த ஸந்தோஷத்துக்கு
ஏதாவது அளவு இருக்குமா என்ன? கண்ணீரோடு,
கம்பிளிக்குள் முடங்கினாள்.
பெரியவாளோட பட்டு
ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது.
பிறருக்கு நாம் செய்யும்
நல்லதும், கெட்டதும்,
உண்மையில், நமக்கு நாமே செய்து கொள்வதுதான்!
ஏனென்றால் அது ஏதாவது
வழியில், நமக்கே திரும்பும்!
பாலு அண்ணா,
பட்டுப் பாட்டிக்கு செய்த கைங்கர்யம்.... அவருக்கே
திரும்பியது....
எப்படி? யாரால்...?
ஸம்போட்டி என்ற ஊரில்
பெரியவா தங்கியிருந்த நேரம், நல்ல மார்கழி மாஸக்
குளிர்!
ஒருநாள், பாலு அண்ணா, அங்கிருந்த ஒரு கோவிலின் திறந்த வெளியில் அஸதி மேலிட,
சுருண்டு படுத்து, அந்தக் குளிரிலும் எப்படியோ உறங்கிப் போனார்.
மறுநாள் விடிகாலை
எழுந்தபோது, தன் மேல் ஒரு ஸால்வை
போர்த்தியிருப்பதைக் கண்டார். ஸஹ பாரிஷதர்கள் யாராவது போர்த்தியிருப்பார்கள் என்று
எண்ணி, இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை.
நாலு நாள் கழித்து,
பெரியவா பாலு அண்ணா இடுப்பில் கட்டியிருந்த ஸால்வையை
பார்த்து விட்டுக் கேட்டார்....
"ஏதுடா பாலு.....போர்வை
நன்னாயிருக்கே! ஏது?"
"தெரியல பெரியவா.....!
வேதபுரியோ,
ஸ்ரீகண்டனோ போத்தியிருப்பா போல இருக்கு.... நான்
தூங்கிண்டிருந்தேன்"
தன் ஊகத்தை சொன்னார்.
பெரியவா ஜாடை பாஷையில்
"ம்ஹும்! அப்படி இல்லை" என்று தன் ஆள்காட்டி விரலை இப்படியும் அப்படியுமாக
ஆட்டிவிட்டு, தன்னுடைய மார்பில்
தட்டிக் காட்டிக் கொண்டார்!
முகத்தில் திருட்டு
சிரிப்பு!
"நல்ல பனி! நீ பாட்டுக்கு....
தரைலயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் போத்திக்காம
படுத்துண்டு இருந்தியா.....!
ஒங்கம்மா பாத்தா எப்டி
நெனைச்சுண்டு இருந்திருப்பா....ன்னு தோணித்து..! அதான் போத்திவிட்டேன்!..."
இந்த க்ஷணத்தை இந்தக்
காட்சியை அப்படியே நாம் மனஸுக்குள் 'snap shot' எடுத்துக் கொண்டு, அதிலேயே மக்னமாகிப் போய்விடணும்!
பெத்த அம்மாவுக்கும்
"பெத்த அம்மாவாக" தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை
அனுபவித்த பாலு அண்ணா என்ற பாக்யவான், கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார்.
பாலு அண்ணாவுக்கு
நமஸ்காரம்.
"நீ எதை நினைக்கிறாயோ
அதுவாகவே மாறி விடுவாய்" என்பது வேதவாக்கு! பாலு அண்ணா, பெரியவாளையே ஸதா ஸ்மரித்து, தர்ஶித்து, உணர்ந்ததால், ஸன்யாஸ கோலத்தில் பெரியவா மாதிரியே இருக்கார்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய
சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!