Showing posts with label Hara Hara Shankara Jaya Jaya Shankara | Kanji mahan | Periva charanam | Periyavaa Charanam. Show all posts
Showing posts with label Hara Hara Shankara Jaya Jaya Shankara | Kanji mahan | Periva charanam | Periyavaa Charanam. Show all posts

Wednesday, April 22, 2020

போ நயினா, காசு என்ன அம்புட்டு பெரிசா? உன் தலையில் நான் இந்த பூவை ஆசையா போட்டு பூசை செஞ்சா, | Periyavaa Charanam,

போ நயினா, காசு என்ன அம்புட்டு பெரிசா? உன் தலையில் நான் இந்த பூவை ஆசையா போட்டு பூசை செஞ்சா, காசு இன்னா, அதுக்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்"

காஞ்சி மடத்துக்கு அப்படி என்ன செய்தாள் அந்த காமாட்சி என்ற சாதாரண ஏழை பெண்மணி.


நீங்களும் நானும் சொல்லாத, சொல்ல தைர்யமில்லாத ஒரு சொல். நாம் அன்னியப்படுத்திக் கொள்கிறோம் அதனால் நம்மால் முடியவில்லை. அவளோ சர்வ சுதந்திரமாக மஹா பெரியவாளை "அப்பா" என்றுதான் பாசமாக அழைப்பாள். 


தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள். ஏகவசனத்தில் தான் பெரியவாளிடம் பேசுபவள்.

"ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!" என்று அடிக்கடி அந்த பூக்காரி காமாக்ஷி இடம் சொல்லுவா - மஹா பெரியவா.
"போ நயினா, காசு என்ன அம்புட்டு பெரிசா? உன் தலையில் நான் இந்த பூவை ஆசையா போட்டு பூசை செஞ்சா, காசு இன்னா, அதுக்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்" இது தான் அந்த பூக்காரிம்மா காமாக்ஷியின் பக்தி பூர்வமான திடமான பதில்

மடத்தில் ஒரு சிஸ்டம் என்ன வென்றால் பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக் கூடாது.ஆனால், இந்தக் காமாட்சி மட்டும் அதுக்கு விதி விலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். எதனால் என்றால் பெரியவாளே அவள் கிட்டே போட்ட கண்டிஷன் :

"காமாட்சி , நீ உன் வியாபாரத்தை எல்லாம் முடித்துக் கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். வேலையை விட்டுட்டு பாதியில் வரக்கூடாது!" அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?
ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் என்ன என்று கேட்டு அதை அவர் சொல்லும் போது கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும்,உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழிஆகிவிடும்.

அன்று, புதுக்கோட்டையிலிருந்து "ஜானா" என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள்.. அதைக் காலை விட்டு, நாள் முழுதும் பெரியவா கழற்றவேயில்லை .படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேக சுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார்.அப்போதுநியூஸ் படிக்கும் நாகராஜன்,
"இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான் தான் பூஜைக்கு எடுத்துக் கொள்வேன், என்னிடம் பெரியவா பாதுகையே இல்லை!" என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார்.

பூக்காரி காமாட்சியும் அப்போது வழக்கம்போல அங்கு வந்து நமஸ்காரம் பண்ணினாள். மஹா பெரியவா பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம், "இது உனக்குத் தான், எடுத்துக்கோ!" என்றார்.

"நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!" என்று நாகராஜன் குறையோடு திரும்பினார்.அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப் பூக்காரி பாத்திரமாயிருந்தாள்.

எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம், இந்தப் பாதுகையைக் கொடு என்றனர்.அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை.ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது.

ஒருநாள் "அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவியா!" என்று புலம்பினாள். கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தவளுக்கு, தூக்கிவாரிப் போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு செம்பருத்திப் பூ யாரோ வீசி எறிந்தது போல் காற்றில் வந்து வந்து அவள் கூடையில் விழுந்தது.

சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து,போயிடுத்து" னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

வேண்டிக் கொண்டவர்களுக்கு அருள் புரிய மஹா பெரியவாதான் எப்போவுமே இருக்காளே. அவர் எங்கே போனார்?

Hara Hara Shankara Jaya Jaya Shankara | Kanji mahan | Periva charanam | Periyavaa Charanam,

(நின் நாமபலத்தால் நீந்துவோம்!...)

ஜெயஜெய ஸங்கர எனும்போதே
பயங்கள் அகன்று ஓடிடுதே!


ஹரஹர ஸங்கர எனும்போதே
ஒருபலம் எம்முள் கூடிடுதே!


தவசிவரூபன் உனைக்கண்டால்
தானாய் நிம்மதி ‌பிறந்திடுதே!


நரசிவரூபனைக் கும்பிட்டால்
நலங்கள் எல்லாம் பெருகிடுதே!


கரதல அபய தரிசனத்தால்
கனிந்து மனமும் நெகிழ்கிறதே!


வரம்தரும் வள்ளலுன் கரிசனத்தால்
வாழ்க்கைப் படகும் நகர்கிறதே!


அருள்திருவுருவம் நின்னாலே
அத்தனை நன்மையும் விளைகிறதே!


இருள்இனிவிலகும் என்பதுவும்
இதயத்துள் இன்பமாய் உதிக்கிறதே!


ஜெயஜெய ஸங்கர என்பதையே
ஜன்மம் முழுதும் சொல்லிடுவோம்!


ஹரஹர ஸங்கர என்பதையே
ஹ்ருதயத்துள் எழுதியும் வைத்திடுவோம்!



 🙏🙏🙏🙏🙏

பெரியவா இச்சா சக்தி நான் கிரியா சக்தி | Hara Hara Shankara Jaya Jaya Shankara | Kanji mahan | Periva charanam | Periyavaa Charanam,

குருவும் சிஷ்யரும் என்ற தலைப்பில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தன் குருவை பற்றி கூறியதை இங்கே பதிவிடுகிறேன்


பெரியவா இச்சா சக்தி நான் கிரியா சக்தி

விழுப்புரத்தில் படித்து கொண்டு இருந்தேன். என்னோட அப்பா ரயில்வே உத்தியோகம் பார்த்து கொண்டு இருந்தார்.குடுமி வெச்சு இருப்பார். வைதீக விஷயங்களில் பலது அவருக்கு அத்துப்படி. நான் நாலாவது படிச்சிண்டு இருந்ததா ஞாபகம். எனக்கு பூணூல் போட்டு விட்டா. அப்ப எங்க ஊருக்கு ஒரு தடவை பரமாச்சாரியார் வந்து இருந்தார். ஊரே திரண்டு போய் அவரை தரிசனம் பண்ணிட்டு வந்தது. எங்க அப்பா அம்மாவும் என்னை கூட்டி கொண்டு போய் இருந்தார்கள்.

ஆசீர்வாதம் வாங்கறதுக்காக பெரியவா கால்ல எங்கப்பா விழுந்து நமஸ்காரம் செய்தார். என்னை பார்த்து லேசாக சிரிச்சு ஆசீர்வாதம் பண்ணார் பெரியவா. உம் புள்ளையா கூட்டி கொண்டு ஒரு தடவை காஞ்சிபுரம் வாயேன். என்று அப்பாவிடம் பெரியவர் கூறினார். அப்பாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம். இவரை பார்த்து தரிசனம் பண்ண முடியாதா இவர் கையால் ஆசீர்வாதம் வாங்க முடியாதா? என்று பலரும் ஏங்கி தவிக்கிற போது நம்ம கிட்ட இப்படி ஒரு கோரிக்கையை வெச்சுட்டாரே என்று சந்தோஷம். கட்டாயம் வர்றேன் என்று சொன்னார். எனக்கும் ஆவல் தாங்க முடியவில்லை . எப்போது காஞ்சிபுரம் போவோம் என்று நச்சரிக்க ஆரம்பித்தேன்.

அந்த நாளும் வந்தது. குடும்பத்தோட நாங்க காஞ்சிபுரம் போனோம். வந்து விட்டாயா இங்கேயே என்று பெரியவர் என்னை பார்த்து கேட்டார். அதுக்கான அர்த்தம் அப்போது தெரியவில்லை பின்னர் தான் புரிந்தது. நிரந்தரமாக இங்கேயே வந்து விட்டாயா என்று கேட்டார் என்று லேட்டாகத்தான் எனக்கு புரிந்தது.

பிறகு என்னை அருகே அழைத்த பெரியவா ஏம்ப்பா சுப்பிரமணியா எனக்கு அடுத்து மடத்தோட பொறுப்புக்களை நீயே கவனித்து கொள்கிறாயா என்று கேட்டார் . எனக்கு அப்போது சின்ன வயது பெரியவர் என்ன கேட்கிறார் என்ன சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. என்னுடைய இயல்பான மன நிலை யை பார்த்து மனதுக்குள் சிரித்த பெரியவா என்ன சொல்றேள் என்று என்னோட அப்பாவை பார்த்தார்.

பெரியவா வாயில் இருந்து பெரிய வார்த்தைகள் வந்து விழுந்து இருக்கிறது. இதுக்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்று தயக்கத்தோடவும் மிகுந்த மரியாதையுடன் சொன்னார். இப்பவே பதில் சொல்லணும் என்கிற அவசியம் இல்லை. கிணத்துக்குள்ளே வாளிய விட்டா உடனேயேவா ஜலம் வந்து விடுகிறது. தாம்பு கயித்தால வாளிய பக்குவமா தண்ணீருக்குள் விட்டு ரொம்பி விட்டதா என்று தெரிந்த பின்னர் தானே மேலே இழுக்கிறோம். அப்புறம் தானே ஜலம் நம்ம கைக்கு கிடைக்கிறது. ஒரு நாலைந்து மாதம் எடுத்து கொள்ளுங்கள்

பின்னர் தானே ஒரு நாள் கூப்பிட்டு விடுகிறேன்.என்ன பதிலாக இருந்தாலும் அப்ப சொன்னால் போதும். இப்ப நீங்க ஜாக்கிரதையாக விழுப்புரம் பொறப்படுங்கள் என்று அனுப்பி வைத்தார்.

பெரியவா சொல்லி மாதிரியே நாலஞ்சு மாசம் போயிருக்கும். எங்களை காஞ்சிபுரம் கூப்பிடுவதாக பெரியவா கிட்டே இருந்து தகவல் வந்தது. கிளம்பினோம்.

இப்ப என்னோட அப்பா தெளிவாக இருந்தார் . அதே புன்னகையுடன் பெரியவா என்னை பார்த்தார். என்ன மடத்துல சேர்த்து விடுகிறாயா என்கிற மாதிரி.. என்னுடைய அப்பா தான் ஆரம்பித்தார். பெரியவா வாக்கை தட்டப்படாது என் பையன் சுப்பிரமணியனோட எதிர் காலம் இது தான் என்று உங்க வாயில் இருந்தே வந்து விழுந்து விட்டது. என் பையனை மடத்துக்கு அனுப்பறதா மனப்பூர்வமாக நான் முடிவு பண்ணிட்டேன்.

ஒரு வினாடி பெரியவா கண் மூடி எதையோ யோசிச்சார் . பின் பக்கம் திருப்பி பார்த்தார். மடத்தோட காரியதரிசி ஒருத்தர் பவ்யமாக வந்து நின்னார் . இந்த பையன் வேதம் படிக்கணும். இங்கிலீஷ் நன்னா கத்துக்கணும். திருவிடைமருதூர் பாடசாலைக்கு இவனை பத்திரிமாக அனுப்புங்கள். என்றார்.

அதன் பின்னர் பல ஊர்களுக்கும் போய் வேதம் சம்பந்தமான பல படிப்புக்களை படிச்சேன். இங்கிலீஷ் நன்னா கத்துண்டேன் . படம் சம்பந்தமான சில முக்கிய காரியதரிசிகள் அப்பப்ப என் கிடடே அன்பா விசாரிப்பார்கள்.

என்னௌட 17வது வயதில் நான் திருவானைக்காவல் இருந்தேன். அப்ப பெரியவா இந்திய தேசம் முழுவதும் ஒரு யாத்திரை போயி இருந்தார். திருப்பதி, காசி, மதுரா என்று பல ஷேத்திரங்கள் போயிட்டு காஞ்சீபுரத்துக்கு திரும்பி இருந்தார். என்னையும் காஞ்சிபுரத்துக்கு வரச் சொல்லி

திருவானைக்காவல் கோவிலுக்கு ஒரு தகவல் வந்தது.

மடத்துக்கு நான் வந்ததும் அங்கிருந்த பல முக்கியஸ்தர்கள் இவர் தான் அடுத்த சங்கராச்சாரியார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டது எனக்கு அரசல் புரசலாக தெரிஞ்சது. அது ஜய வருடம் சுப்ரமண்யன் ஆன நான் அன்று முதல் ஜெயேந்திரர் என பெரியவாளால் புதிய நாமகரணம் சூட்டப்பட்டேன் .
காஞ்சி மடத்தில் உள்ள மண்டபத்தில் இளைய சங்கராச்சாரியார் ஆக பதவி ஏற்றுக் கொண்டேன். காவி துணியும் தண்டமுமா முழு துறவி ஆனேன். அன்று மடத்துக்கு வந்து இருந்த பக்தர்கள் பல பேருக்கு என்கிட்ட பிரசாதம் ஆசி வாங்கறதுக்காக விழுந்து நமஸ்கரித்தார்கள் இறை தொண்டில் கிடைக்க கூடிய பிரியமே அலாதி.

அதன் பிறகு பெரியவா என்னை கூப்பிட்டு என்னெவெல்லாம் நான் செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்.

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் நாட்டில் இந்து மதம் தழைத்து ஒங்க வேண்டும்.கோயில்களில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் உதவி என்று கேட்டு வரும் எவரையும் நாம் ஒதுக்க கூடாது. கல்வி சாலைகள் வளர்க்க வேண்டும் தர்மம் நிலைப்பெற செய்ய வேண்டும். இதற்கு எல்லாம் யாத்திரைகள் சென்று மடத்துக்கு வருமானம் பெருக்க வேண்டும். இப்படி பல விஷயங்கள் சொன்னார்.

பெரியவா வாக்குப்படி முதல் யாத்திரையாக குஜராத்துக்கு அனுப்ப பட்டேன். அங்கு அஹமதாபாத்தில் தங்கினேன். அப்பொழுது வேத விஷயங்களில் பிரபலமாக இருந்த ஒரு மஹாராஜாவை வரவழைத்து உபன்யாசத்துக்கு ஏற்பாடு செய்தேன். இதுக்காக ஒரு இடத்தில் பிரமாண்டமாக பந்தல் போடப்பட்டது.நாலஞ்சு நாட்கள் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நடந்தது. நல்ல விளம்பரம் செய்து கூட்டம் கூட்டினேன் . இப்படி தடபுடலாக நடந்தது அந்த நிகழ்ச்சி.

அப்போ அஹமதாபாத் நகர் முழுவதும் இதே பேச்சாகத்தான் இருந்தது. காஞ்சிபுரத்துலே இருந்து இளைய சங்கராச்சாரியார் முதன் முறையாக குஜராத்துக்கு வந்து இருக்கார்.ஏதோ உபன்யாசமாம் வா போகலாம். என்று ஒரே பேச்சாக ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சி மூலமாக சுமார் பத்து லட்சம் ரூபாய் வசூலாகியது மடத்துக்கு பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைத்து நான் ஏற்பாடு செஞ்ச இந்த முதல் நிகழ்ச்சியே பிரமாதமாக அமைந்தது.


இந்த பணத்தை அப்படியே கொண்டு போய் பெரியவாளிடம் தர வேண்டும் என்று நான் புறப்பட்டேன் மஹாராஷ்டிராவுக்கு அப்போ சதாரா என்கிற ஊரில் பெரியவா முகாம் இட்டு இருந்தார்.சத்ரபதி சிவாஜி பிறந்த ஊர் அது. பெரியவாளை சந்திச்சு விஷயம் சொல்லி பணத்தை கொடுத்தேன். பணத்தை பெரியவா தொட மாட்டார். அப்படி அந்த ஸ்வாமி முன்னால் வை என்று எனக்கு உத்திரவு இட்டு சதாராவில் நடராஜ பெருமானுக்கு கோயில் அமைக்கும் பணிக்கு இதை அப்படியே பயன் படுத்தி கொள்ளுமாறு உத்தரவு இட்டார்


ஆறு மாசம் அங்கேயே நான் தங்கி கோயில் கட்டும் முயற்சியில் இறங்கினேன். அது 1980 வருடம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். கோயிலுக்கு மொத்தம் நாலு கோபுரம் கட்ட வேண்டும். அப்போ கேரள முதலமைச்சர் ஆக இருந்த கருணாகரனிடம் நடராஜர் கோயிலுக்கு மரங்கள் சப்ளை செய்யுங்கள் என்று விண்ணப்பம் அனுப்பினோம். கேட்டப்படியே வந்தது. இதே மாதிரி அப்போது தமிழக முதல்வர் ஆக இருந்த எம்.ஜி.ஆர் அரசும் இந்த கோயில் கட்டுவதற்காக பல உதவிகள் செய்தார்கள்.

1986 வருடம் பெரியவா முன்னிலையில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அங்கேயே உட்கார்ந்தா வேலை ஆகுமா எனக்கு? அடுத்து அடுத்து யாத்திரை புறப்பட்டேன். இப்படி இந்திய தேசம் முழுவதும் சுற்றி கொண்டே இருந்தேன்.
அப்ப காஞ்சி மடத்துக்கும் கர்னாடகாவில் இருந்த சிருங்கேரி மடத்துக்கும் பல அபிப்பிராய பேதங்கள் இருந்து வந்தன இப்ப இருக்கிற நம்ம வாஜ்பாய் முஷரப் போல் ( சிரிக்கிறார்)


எத்தனையோ சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எதுவும் சரியா வரலை. பெரியவா என்னை கூப்பிட்டார்.என்னோட காலத்துக்குள்ளே இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துடணும் மனுஷாலுக்கு உள்ள அபிப்பிராய பேதம் வரக்கூடாது. அங்கே சாரதாம்பாளும் ஒண்ணு தான் இங்கே காமாட்சி அம்மனும் ஒண்ணு தான்.

நீ தான் ஏதாவது முயற்சி பண்ணி சமாதானத்தை கொண்டு வரணும். என்று என்கிட்ட சொன்னார்.அது நரசிம்ம ராவ் ஆட்சி காலம். ராம் ஜென்ம பூமி பிரச்சினை இருந்த நேரம். இதையே ஒரு சாக்காக வெச்சுண்டு சமாதான முயற்ச்சி ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. ராம ஜென்ம பூமி பத்தி பேசுகிற சாக்கில் சிருங்கேரி மடாதிபதியை சந்தித்து பரஸ்பரம் விசாரித்து படங்கள் சம்பந்தமான பிரச்சினையை பேசி முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று பிளான்

இந்த விஷயத்தை நானே முன் நின்று ஆரம்பிச்சா சரியா வராது என்று தீர்மாசனிச்சு இப்படி ஒரு மாநாட்டை நீங்கள் கூட்டுங்களேன் என்று நரசிம்ம ராவுக்கு செய்தி அனுப்பினேன். அவரும் தாராளமாக சம்மதித்து இதுக்கு என்று பெங்களூர்ல ஒரு கமிட்டியை நியமிச்சார்.

இதுக்கு முன்னாடி காஞ்சி மடம் சார்பில் ஒரு வெண் குடை தயாரிச்சு சிருங்கேரி மடத்துக்கு அனுப்பி வைப்போம் . நாமெல்லாம் சமாதானமாக இருக்கோம் என்று அடையாளம் காட்டுவதற்காக அந்த வெண் குடை.

ஆந்திராவில் டூரில் இருந்த எனக்கு அழைப்பு சிருங்கேரியில் இருந்து வந்து இருப்பதாக தகவல் வந்தது. அதற்கு ஏற்பாடு செய்தேன் நான் தானே. எப்போது அழைப்பு வரும் என்று காத்துக் கொண்டு இருந்த எனக்கு சந்தோஷம் தான்.நானும் பால் பெரியவாளும் உடனே புறப்பட்டு சிருங்கேரி போனோம்.

இந்தியா முழுவதிலும் இருந்து பல மடாதிபதிகள் அதில் கலந்து கொண்டனர்.
முதல் நாள் சிருங்கேரி மடாதிபதியும் நானும் தனியா சந்தித்து பேசினோம். அப்புறம் அம்பாள் தரிசனம். பிரசாதம் கொடுத்தா .

ரொம்பவும் இன்முகத்துடன் பேசி திரும்பினோம். காஞ்சிபுரம் திரும்பி பெரியவாளிடம் சிருங்கேரி டிரிப் பற்றி முழுக்க சொன்னவுடன் அவர் முகத்தில் சந்தோஷ ரேகைகள். என் காலத்துக்குள் இது முடியுமா என்கிற அச்சம் இருந்தது. அது இப்ப போயிடுத்து. என்று புளகாங்கிதப் பட்டார். எனக்கு எத்தனை நாள் ஆனாலும் மறக்க முடியாத சம்பவம் இது.

அதாவது பெரியவா இச்சா சக்தி நான் கிரியா சக்தி. ஆசைப்பட்டார். நான் நிறைவேற்றி காண்பித்தேன். அவ்வளவு தான் மத்தப்படி எல்லாம் பகவான் கையில் தான் இருக்கு . பேட்டியை முடித்து கொண்டு புன்னகையுடன் விடை கொடுத்தார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

இது 2002 விகடன் பவழ விழா மலர் இருந்து எடுக்கப்பட்டது.

Tuesday, April 21, 2020

Hara Hara Shankara Jaya Jaya Shankara | Kanji mahan | Periva charanam | Periyavaa Charanam,

மகாப்பெரியவர் பிறந்த ஊரான விழுப்புரத்திற்கு அருகில் உள்ளது வளவனூர். சுவாமிகள் அங்கே முகாமிட்டிருந்தார். அன்றிரவு முகாமை முடித்துக் கொண்டு வேறு ஊர் செல்ல தயாராகி கொண்டிருந்தார். பூஜைப் பொருட்களை எடுத்து வைக்கச் சொன்னார் பெரியவர். சிப்பந்திகள் ஜாக்கிரதையாக கட்டி வைக்க தொடங்கினர்.

அந்த நேரத்தில் வந்தார் ஒரு மூதாட்டி. தனக்கு ஒரு ருத்ராட்சம் வேண்டும், கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என சிப்பந்திகளை கேட்டார். பூஜைப் பொருட்களை கட்டி வைத்ததால் அவர்களுக்கு பிரிக்க முடியவில்லை. ''இப்போது கொடுப்பதற்கில்லை! இன்னொரு முறை சுவாமிகள் முகாமிடும் போது வாருங்கள்!''எனக் கூறினர்.

'வயதான காலத்தில் இன்னொரு முறை எங்கே அலைவது?' மூதாட்டிக்கு மனதில் சோகம் உண்டானது.
அங்கிருந்த தீட்சிதர் ஒருவருக்கு மூதாட்டியிடம் பரிவு வந்தது.
''சுவாமிகள் உள்ளே தான் இருக்கிறார். அவரிடம் கேட்டு ருத்ராட்சம் பெறலாமே'' என வழிகாட்டினார்.



மூதாட்டி, ''நான் விழுப்புரத்தைச் சேர்ந்தவள், பெயர் சொல்லி, நான் வந்திருப்பதாக தெரிவியுங்கள், கட்டாயம் ருத்ராட்சம் தருவார்!'' என கூறினார்.
தீட்சிதருக்கு மூதாட்டியின் பேச்சில் சூட்சுமம் இருப்பதாக தோன்றியது. உடனே சுவாமிகளிடம் மூதாட்டி குறித்து தெரிவித்தார். மூதாட்டியின் ஊர், பெயரைக் கேட்ட சுவாமிகள் வியப்படைந்தார். பூஜை பொருட்களை, பிரித்து ஒரு ருத்ராட்சம் எடுத்து வருமாறு உத்தரவிட்டார். பின் மூதாட்டியை அழைத்து ருத்ராட்சத்தை பரிவுடன் கொடுத்தனுப்பினார். மூதாட்டி கண்ணீருடன் விடைபெற்றார்.


யார் அந்த மூதாட்டி என்ற கேள்வியைக் கண்ணில் தேக்கி நின்றார் தீட்சிதர்.
மகாபெரியவர், ''இந்த ஜீவன் மண்ணுலகத்திற்கு வருவதற்கு இந்த அம்மா தான் பிரசவ காலத்தில் உதவியவர்''


சுவாமிகளின் தாயாருக்குப் பிரசவம் பார்த்தவர் தான் அந்த மூதாட்டி!
உடல் இருந்தால் தானே பகவானை வழிபட்டு முக்தி பெற முடியும்? அந்த உடலைப் பெற உதவியருக்கு நன்றி செலுத்த வேண்டாமா என சுவாமிகள் கேட்பது தீட்சிதருக்கு புரிந்தது.

Hara Hara Shankara Jaya Jaya Shankara | Kanji mahan | Periva charanam | Periyavaa Charanam,

!! "காஞ்சி மகான் கருணை "!!
Life-ல பிடிப்பே இல்ல பெரியவா...
பல வர்ஷங்களுக்கு முன் நடந்த ஸம்பவம்.
ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்ஶனம் பண்ண "க்யூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.




"பெரியவா..நா.. ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்... கொழந்தேள்-ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணணுன்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரஹம் பண்ணணும்"
பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி.
"வாழறதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்ல-ன்னுதானே கவலைப்படற?"
"ஆமா........."
"எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"
"உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்"
அவரை அப்படியே விட்டுவிட்டு, அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குஶலப்ரஶ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயஸானவர்கள்தான். அவர்களுடைய பெண்ணும், கூட வந்திருந்தாள்.
"இவ, எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். நல்ல வரன் வந்திருக்கு...பெரியவாதான் ஆஸிர்வாதம் பண்ணணும்...."
கையை உயர்த்தி ஆஶிர்வதித்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பினார்....
"Life-ல பிடிப்பு வேணுன்னியே! இதோ......இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்-னு ஒன் ஸொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்"
ரெண்டு தம்பதிகளும் முதலில் முழித்தார்கள். பெண்ணின் பெற்றோர் நல்ல வஸதி படைத்தவர்கள்தான்! பின் எதற்கு யாரோ ஒருவர் செலவு பண்ணி, கன்யாதானமும் பண்ணணும்?.....
"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்....பெரியவா உத்தரவு"
பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார்.
பெரியவா அவர் மனைவியை காட்டி, அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டினார்.
அவருக்கு புரிந்தது.........
"ஆமா, இவ என் ரெண்டாவது ஸம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவள... கல்யாணம் பண்ணிண்டேன்".
பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்!
"ஸெரி....ஒனக்கு மூத்த தாரத்தோடது, பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?......"
"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு"!!!
எங்கேயிருந்து எங்கேயோ கொக்கி போட்டு இழுத்துட்டாரே! பெரியவாளுக்கு எப்டி தெரியும்?
ரொம்ப கூனிக்குறுகி, ஒத்துக் கொண்டார்.
"ஆமா...ஒரு பொண் கொழந்த இருந்தா..! இவ, சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தைய படாதபாடு படுத்தினதுனால, அந்தக் கொழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா..! நானும் தேடாத எடமில்ல! போனவ போனவதான்...!"
துக்கத்தால் குரல் அடைத்தது.
"ம்ம்ம்ம்.. பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ....... இந்தா! பிடிச்சுக்கோ! ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போயி... நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........."
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!
என்னது? ..
இது ஸத்யம் ! ஸத்யம்!
பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்!
உண்மைதான்!
" ஆமா..பெரியவா! ரொம்ப வர்ஷம் முந்தி, நாங்க ட்ரெய்ன்ல ஊருக்கு போய்ண்டிருந்தோம். அப்போ ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல இந்தக் கொழந்தை அழுதுண்டு நின்னுண்டிருந்தா..! விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால அவள, அங்க தனியா விட மனஸு ஒப்பல... பொண் கொழந்தையாச்சே! அதான், நாங்களே கூட்டிண்டு போயி, எங்க கொழந்தையா வளத்துண்டு வரோம்..."

பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் ஸந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.

இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது.

மஹான்களின் ஸந்நிதியில் அது ஸஹஜமாக, அனுபவத்திலும் வரும்.
" இந்தா...பிடி! பதினெட்டு வர்ஷத்துக்கு முன்னால தொலைஞ்சு போன ஒம்பொண்ணு!" என்று 'திருப்பதி லட்டு' மாதிரி, பெற்றவரிடம் casual-லாக ஒப்படைக்க, பெரியவாளால்தான் முடியும்.
நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும், வீட்டில் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது போல், ஸர்வ ஸாதாரணமாக cosmic level-ல் விளையாடக் கூடியவா, பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்தான்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..

Hara Hara Shankara Jaya Jaya Shankara | Kanji mahan | Periva charanam | Periyavaa Charanam,


Hara Hara Shankara Jaya Jaya Shankara | Kanji mahan | Periva charanam | Periyavaa Charanam


மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...