கிருஷ்ண பக்தை அம்மாளு
அம்மாள்
கன்னட தேசத்துப்பெண்
ஒருவள் அங்கே வாழும் பெரும்பாலானவர்கள் போல மாத்வ வகுப்பை சேர்ந்தவள். கும்பகோணத்தில்
இத்தகைய ஒரு குடும்பத்தில் 1906ல் அவள் பிறந்தாள்
.
அந்த கால வழக்கப்படி
குழந்தையாக இருந்த போதே அவளுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணம் என்றால் என்ன என்றே தெரியாத
நிலையில், புருஷன் என்கிற பையன்
பொறுப்பான கணவனாக மாறுவதற்கு முன்பே மரணம் அடைந்ததால் அவள் குழந்தை விதவை ஆகிவிட்டாள்
. அப்பப்பா, அந்தக்கால விதவைகளுக்கு
நிகழ்ந்த கொடுமைகளை எழுத்தால் விவரிக்க முடியாது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஜென்மங்கள்.
அந்த பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு, உள்ளத்தில் நொறுக்கப்பட்டு, சமூகத்தில் அபசகுனமாக
வெறுக்கப்பட்டு உலகத்தால் சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து
வாழ்ந்தாள். நரசிம்மனிடம், நாராயணனிடம்,
கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர்வாழ்வதில்
கொஞ்சமாவது அக்கறை கொள்ள செய்தது.
இந்த சமூகம் எனும்
கொடிய உலகத்திலிருந்து, நரகத்திலிருந்து விடுதலைபெற
தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள் . பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள்
''பகவானே, என்னை ஏற்றுக்கொள் '' என்று குதிக்கும்போது ''நில் '' என்று ஒரு குரல் தடுத்தது.
கண் விழித்தாள். உக்கிரமான நரசிம்மன் அவள் எதிரே சாந்தஸ்வரூபியாக நின்றான்.
''எதற்காக இந்த தற்கொலை
முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிஷம் வரை உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க நிழலும் தான் கிடைக்கபோகிறதே'' என்ற நரசிம்மனை வாழ்த்தி வணங்கினாள் .
''பகவானே, எனக்கு ஒரு வரம் தா''
''என்ன கேள் அம்மாளு
''. அவள் எல்லோராலும் அம்மாளு
என்று தான் அழைக்கப்பட்டவள்.
''எனக்கு பசியே இருக்கக்கூடாது''.
''அம்மாளு ,
இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது. போதுமா''
என்று தெய்வம் வரமளித்தது.
அன்று முதல்,
ஒரு நாளைக்கு ஒருமுறை ஒரு டம்பளர் மோர்,
பால், ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி
அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். கிருஷ்ண பஜனையில் நாள் தோறும் அற்புதமாக
தனைமறந்த நிலையில் கடைசி மூச்சு பிரியும் வரை ஈடுபட்டாள்.
இளம் விதைவையாக வாழ்ந்த
அம்மாளு அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான்.
''நீ பண்டரிபுரம் வாயேன்''
என்றான் பண்டரிநாதன்.
இந்த குரல் அவளை மறுநாள்
பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை
''நீயும் என் கூட வா ''
என்று கூப்பிட வைத்தது. அம்மா வரவில்லை. தனியாக
கட்டிய துணியோடும் , தம்புராவோடும் பண்டரிபுரம்
சென்றவள் பல வருஷங்கள் அங்கேயே தங்கிவிட்டாள் . கோவிலை அலம்பினாள் , பெருக்கினாள் , கோலமிட்டாள், மலர்கள் பறித்து மாலை தொடுத்தாள் , சூட்டினாள், பாடினாள் நிறைய பக்ஷணங்கள்,
உணவு வகைகள் சமைத்தாள். எல்லாம் அவளது அடுப்பில்
குமுட்டியிலும் தான். பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள் . எல்லோருக்கும்
அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை.
அந்த ஊர் ராணி,
அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள்
நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து
விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்கள் சர மாரியாக அவள் வாயிலிருந்து
பிறந்தன. எந்த க்ஷேத்ரம் சென்றாலும் அந்த ஸ்தல மஹிமை அப்படியே அவள் பாடலில் த்வனிக்கும்,.
அவள் அந்த க்ஷேத்ரங்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை,
ஒன்றுமே தெரியாது, என்றாலும் இந்த அதிசயம் பல க்ஷேத்ரங்களில் நடந்திருக்கிறது!
இன்னொரு அதிசயம் சொல்கிறேன்.
ஒரு பெரியவர் மரணத்தருவாயில்
இருக்கும்போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும்
அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தனைமறந்த நிலையில் கண்களை மூடி
பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள்.
அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராமநாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர்
என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது!
அம்மாளு அம்மாள் நரசிம்மனை
மறப்பாளா? தன் உயிரைக் காத்து
புதிய பாதை அமைத்துக் கொடுத்த நரசிம்மனுக்கு ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடினாள். அன்று
108 வகை பிரசாதங்கள்,
பக்ஷணங்களை ஆசையோடு தயாரித்தாள். வழக்கமான உணவும்
இதைத்தவிர சமைத்தாள். '' இந்தா நரசிம்மா வா,
வந்து இதை ஏற்றுக்கொள்'' என்று அர்பணித்தாள். அன்று வெகு அருமையான கீர்த்தனங்களை பொழிவாள்.
தானாகவே தைல தாரையாக ஆயிரக்கணக்கான ஸ்லோகங்கள், கீர்த்தனைகள் அவள் வாயிலிருந்து புறப்பட்டிருக்கிறது.
ஒரு ஆச்சர்யமான சம்பவம்
சொல்கிறேன் கேளுங்கள். மஹா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒரு மாத்வர்
''என் பெண்ணுக்கு கல்யாணம்.
பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம் பெற வந்திருக்கிறேன்'' என்கிறார்.
''என்கிட்டே எதுக்கு
வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்யஉபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ.
உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக்கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் ''.பெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் மஹத்வத்தை எல்லோருக்கும்
அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மஹா பெரியவா
ஒரு தடவை ''அம்மாளு அம்மாள் புரந்தர
தாசர் அம்சம்'' என்று கூறியிருக்கிறார்.
பாகவத தர்மத்தின்
உதாரணமாக நித்ய பஜனை, ஆடல் பாடல் என்று
அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. கிருஷ்ணனை நேரில் கண்டாள் என்பார்கள்.
ஒரு சமயம் சென்னை
ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு அம்மாள்
தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற
நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி, தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு
அம்மாளு அம்மாள் தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய
நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில், கீழே தாள சப்தமும், நர்த்தனம் ஆடும் சப்தமும்
கேட்டதும் இந்நேரத் தில் யார் ஆடுவார்? ப்ரமையோ என்றிருந்தனர். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க, நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்தபோது அம்மாளு
அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார்.
உடனே தாளத்தை வாங்கி
நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை
மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் ‘பாலக் கடல சய்யா’ எனும் கீர்த்தனம்
பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி,
‘‘சில ஜதிகள், நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது.
அதைப்போன்ற, எவராலும் சாதாரணமாக
ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல,
யாராலும் பயிற்றுவிக்க முடியாததும்கூட’’ என்று கூறி
பிரமித்து நின்றனர். ‘‘இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு’’ என உணர்ச்சிவசப்பட்டனர்.
இவள் புரந்தர தாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்தார்கள்.