Showing posts with label கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!”. Show all posts
Showing posts with label கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!”. Show all posts

Thursday, April 9, 2020

கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!”

கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!”
மகாபெரியவாவின் அற்புதங்களை நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கலாம். அள்ள அள்ள குறையாத தங்க சுரங்கத்தை போல, அவரது மகிமைகள் வந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் ஒளிந்திருக்கும். திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த விஷயத்தை இங்கு உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். கீழே காணும் இந்த சம்பவம் உணர்த்தும் பாடத்தை கட்டுரை ஆசிரியர் மிக அழகாக இறுதியில் விளக்கியிருக்கிறார்.
 
பொதுவாக யானைக்கு மதம் பிடித்துவிட்டால் அதை அடக்குவது அத்துணை சுலபமல்ல. சர்வ நாசம் செய்துவிட்டு அதுவாக தணிந்தால் தான் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மகா பெரியவா தன் பார்வையாலேயே யானையை அடக்கிய சம்பவம் ஒன்றை பார்ப்போமா?
செம்மங்குடியில் பட்டாமணியார் வீட்டில் பூஜை. மடத்தின் ஸ்ரீகார்யம்,ஸ்வாமி அபிஷேகத்துக்காக பட்டத்துயானை மேல் ஒரு வெள்ளிக்குடத்தில், செம்மங்குடி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார். பட்டாமணியார் வீட்டுவாசலுக்கு வந்ததோ இல்லையோ, யானைக்கு மதம் பிடித்துவிட்டது!
நல்லவேளை, ஸ்ரீகார்யம் வெள்ளிக்குடத்தோடு கீழே குதித்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். யானைப்பாகனோ, உயிர் பிழைத்தால் போதும் என்று எங்கேயோ ஓடிவிட்டான்! ஒரே அமளிதுமளி! தெருவில் உள்ளவர்கள் அத்தனை பேரும் கிடைத்த வீட்டுக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டு, ஜன்னல் வழியாக கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
யானை, கிழக்குக் கோடியிலிருந்து மேற்குக் கோடிவரை கன்னாபின்னாவென்று ஓடி, அட்டஹாசம் பண்ணிக் கொண்டிருந்தது! ஒரே பிளிறல்! பெரியவாளை வரவேற்க போட்டிருந்த பந்தக்கால்கள், தூண்கள், திண்ணையில் போட்டிருந்த தட்டிகள் எல்லாவற்றையும் அடித்து இழுத்து த்வம்ஸம் பண்ணிக் கொண்டிருந்தது! உள்ளே ஓடிய ஸ்ரீகார்யம் பெரியவாளிடம் “யானைக்கு மதம் பிடிச்சுடுத்து!……பெரியவா” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கூறினார். குடத்தோடு கீழே குதித்த பயம் இன்னும் போகவில்லை. தெருவில் ஈ காக்காய் இல்லை. யானை மட்டும் இங்கே அங்கே ஓடிக் கொண்டிருந்தது.
இதோ………கஜேந்த்ரவரதனாக வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார் பெரியவா கையில் நம் எல்லாருடைய மதத்தையும் அடக்கவல்ல தண்டத்தோடு! தன்னந்தனியாக மதம் கொண்ட யானையின் எதிரே போய் நின்றார்!
“கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!” தெய்வத்தின் குரல்……. நம் போன்ற ஆறறிவு, பகுத்தறிவு என்று பீற்றிக்கொள்ளும் மானிட ஜாதியை விட, ஐந்தறிவு, ஏன்? அறிவேயில்லாத அசேதன வஸ்துக்களுக்கு கூட உள்ளே சென்று வேலை செய்யும் தெய்வத்தின் குரல்..ஓங்கி ஓலித்தது!
இதோ ஐந்தறிவு ஜீவனாக, ப்ரம்மாண்டமாக அட்டஹாசம் பண்ணிக் கொண்டிருந்த யானை, பூஞ்சை மேனியரைக் கண்டதும் கட்டிப்போட்ட பசு மாதிரி வடக்குப்பக்கம் தலையும், தெற்குப்பக்கம் வாலும் வைத்து, தெருவையே அடைத்துக் கொண்டு பெரிய மூட்டை போல் மஹா சாதுவாகப் படுத்துக் கொண்டது! ஜன்னல், மேல்மாடிகளில் இருந்து இந்த கண்கொள்ளாக் காட்சியை, அதிசயத்தை அன்று கண்டு களித்த பாக்யவான்கள் ஏராளம்!
வாசலில் இருந்து கஜேந்த்ரவரதனை பார்த்துக் கொடிருந்த ஸ்ரீகார்யத்தை அழைத்து, “கல்பூரம், சாம்ப்ராணி,வாழைப்பழம், பூ…..எல்லாம் ஒடனே கொண்டா”எட்ட இருந்தே பெரியவா சொன்னதை குறித்துக் கொண்ட ஸ்ரீகார்யம், அவர் கேட்டதை ஒரு மூங்கில் தட்டில் வைத்து, யானையின் மேல் உள்ள பயத்தால், திண்ணையிலேயே வைத்து விட்டுப் போய்விட்டார், உயிருக்கு பயந்து!
பெரியவா தானே அந்த மூங்கில் தட்டை கொண்டுவந்து, ஒருமணிநேரம் முன்பு தெருவையே பிய்த்துப் போட்டுவிட்டு, இப்போது சமத்து சக்கரைக்கட்டியாக வாலை சுருட்டி, உடலைக் குறுக்கி, காதைக் காதை ஆட்டிக் கொண்டிருந்த யானைக்கு கஜபூஜை பண்ணி, பூ சாத்தி, கல்பூரம் ஏற்றி சாம்ப்ராணி காட்டி விட்டு, வாழைப்பழத்தை தன் திருக்கரங்களால் அதன் வாய்க்குள் குடுத்தார். “எழுந்து போ! இனிமே விஷமம் கிஷமம் பண்ணாதே!” என்றதும், அந்த பெரிய சர்க்கரை மலை மெல்ல எழுந்து அடக்க ஒடுக்கமாக, அந்த இத்தனூண்டு தெருவில் கால்வாசி இடம் விட்டு ஒரு ஓரமாக நின்றது.
 நமது மனமும் இப்படி யானை மாதிரி மதம் பிடித்து சில சமயங்களில் கண் மண் தெரியாது ஓடிக்கொண்டிருக்கும்.

யானையை அடக்கிய காஞ்சி மாமுனிவர் திருவடிகளைப் பற்றிக் கொண்டோமேயானால், மதம் தானாக அடங்கி, மனம் குழந்தையாகிவிடும். அவர் சரணங்களைத் தவிர நமக்குப் புகலிடம் ஏது?
 

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...