Showing posts with label மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் -. Show all posts
Showing posts with label மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் -. Show all posts

Tuesday, March 15, 2022

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செய்துவிட்டால், அவர்களுக்கு அனுக்ரஹ ஶக்தி வந்துவிடும் என்பதை இந்த ஸம்பவம் உணர்த்துகிறது. பந்தநல்லூர் ஸ்ரீ பந்தாடு நாயகி ஸமேத பஶுபதிநாதர் கோவிலில் உள்ள துர்க்கை, பக்தர்களை ஈர்த்தாள்!
எப்படி? ......



 


 

 

 

 

 

அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் ஓரமாக கஸிந்து கொண்டே இருந்தது. பக்தர்களும் இதை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யும் ஶிவஸ்ரீ ஜகதீஶ ஶிவாச்சார்ய குருக்கள் அவளுடைய கண்களை பதமாக துடைத்து விட்டாலும் அது நின்றபாடில்லை! கண்களின் ஓரத்தில் கண்ணீர் கஸிவு தெரிந்தது. அவருடைய மனஸும் மிகவும் வேதனைப் பட்டது.
"அம்மா! உனக்கே ஏன் இந்த வேதனை?..."

ஒரு கன்னியாப் பெண்ணை துர்க்கையாக பாவித்து, ஆராதனை செய்து, அவளுக்கு ஸௌபாக்ய த்ரவ்யங்களை ஸமர்ப்பித்தார். பிறகு நவாக்ஷரி மந்த்ர ஜபம் செய்தார். பிறகு துர்க்கையாக ஆராதனை செய்யப்பட்ட பெண்ணின் முன்னால் அமர்ந்து கொண்டு, "அம்மா! என்ன குறை? ஏன் இந்தக் கண்ணீர்?" தாயிடம் கெஞ்சிக் கேட்டார்.

அந்தப் பெண்ணும் ஏதோ ஒருவித 'trans'ல் இருந்தாள். இவர் இப்படிக் கேட்டதும், அந்தப் பெண் சொன்னாள். "பச்சை நிறத்தில் பாவாடை கட்டிண்டு தெய்வீகமான அழகோட ஒரு பொண்ணு, "என்னோட சுமையை குறை" ன்னு சொல்லிட்டு மறைஞ்சு போய்ட்டா....." பிறகு கோவிலில் அந்த விஷ்ணு துர்க்கைக்கு, விஸேஷமான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டதும் கண்ணீர் வருவது நின்றுவிட்டது. ஆனாலும், துர்க்கைக்கு உண்டான சுமை என்ன?....பதில் கிடைக்கவில்லை.

"எதுன்னாலும் நா.....இருக்கேன்" என்று சொல்லாமல் அனுக்ரஹம் செய்யும் பெரியவா இருந்த காஞ்சிக்கு போனார் ஶிவாச்சாரியார். பெரியவாளை தர்ஶனம் பண்ணிவிட்டு, துர்க்கையம்மனைப்பற்றி கூறினார்.

"எங்க ஊர் கோவில்ல விஷ்ணு துர்க்கைக்கி, கண்ணுலேர்ந்து நீரா வழிஞ்சது. அம்பாள் "என்னோட சுமையை குறை"ன்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டா! அப்றம் விஸேஷமா அபிஷேக ஆராதனைகள் பண்ணினோம். இப்போ ஸெரியாயிடுத்து. ஆனா, பெரியவாதான் அம்பாளுக்கு என்ன சுமை-ங்கறதை சொல்லணும்."

"இவர்ட்ட 25 லிட்டர் கங்காஜலத்தை குடு" பாரிஷதரிடம் உத்தரவிட்டார். கங்கா ஜலம் வந்தது. "25 லிட்டர் கங்கா ஜலத்ல, லக்ஷம் ஆவ்ருத்தி நவாக்ஷரி மந்த்ரத்தை உருவேத்துங்கோ! அப்றம் அந்த ஜலத்தால, அம்பாளுக்கு அபிஷேகம் பண்ணிட்டு, எங்கிட்ட வாங்கோ....!" ஶிவாச்சார்யார் கங்கா ஜலத்துடன் ஊருக்கு வந்தார்.....

நாலு மாஸங்களில் லக்ஷம் நவாக்ஷரி உருவேற்றிய கங்கா ஜலத்தைக் கொண்டு பெரியவா சொன்ன மாதிரி அம்பாளுக்கு அபிஷேகம் முடித்துவிட்டு, ஓரிக்கையில் வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார். "பெரியவா சொன்னபடி பண்ணிட்டோம்...." பெரியவா கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார். "துர்க்கையோட ஶிரஸுக்கு மேல, மண்டபம் இடிக்கறதான்னு பாருங்கோ" அடடா! அத்தனை நாட்கள் தினமும் பூஜை செய்தும், தான் இதை கவனிக்கவில்லையே! என்று நினைத்தார். "கவனிக்கல பெரியவா..! ஊருக்குப் போய்ப் பாத்துட்டு வரேன்"

ஊருக்கு வந்ததும், முதல் வேலையாக, அம்பாளின் தலைக்கு மேலே ஒரு கெட்டியான நூலை விட்டுப் பார்த்தால்! பெரியவா.....சொன்னதுபோல், மேல்கூரை அம்பாளின் ஶிரஸின் மேல் பட்டுக் கொண்டிருந்ததால், நூலை அடுத்த பக்கம் கொண்டுபோக முடியவில்லை! எப்படி மேற்கூரை அம்பாள் தலை மேல் இறங்கியது? சுவரில் ஏற்பட்ட ஏதோ விரிசலால், மேற்கூரை கொஞ்சம் ஸாய்ந்து, அம்பிகையின் தலைமேல் பட்டுக் கொண்டிருந்திருக்கிறது! உடனே பெரியவாளிடம் ஓடினார். மேல்கூரை அம்பாள் தலைமேல் இறங்கியிருப்பதை சொன்னார்.

"துர்க்கையோட செலையை வெளில எடுத்துட்டு, அம்பாளோட ஶிரஸுக்கு மேல இடிக்கற அந்த கூரையை லேஸா கொடைஞ்சுட்டு, மறுபடியும் அம்பாளை அங்கியே ப்ரதிஷ்டை பண்ணிட்டு, ஒரு கும்பாபிஷேகம் பண்ணிடுங்கோ!" பஹு ஸுலபமான தீர்வைக் கூறி அனுக்ரஹித்தார்.....

பெரியவா உத்தரவுப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டு 1987-ல் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. ப்ரஸாதத்தோடு பெரியவாளை தர்ஶனம் பண்ண ஶிவாச்சாரியார் சென்றார். அழகாக சிரித்துக் கொண்டே ப்ரஸாதத்தை ஸ்வீகரித்துக் கொண்டே....

"ஒங்க ஊர் ஜனங்கள்..... ரொம்ப பாக்யசாலிகள்! அம்பாள் அழுதது, எல்லாருக்கும் அனுக்ரஹம் பண்றதுக்குத்தான்..!!" பெரியவா பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒரு குஜராத்தி பக்தர் வந்தார். அவரிடம் ஏதோ ஹிந்தியில் பேசிவிட்டு, ஶிவாச்சார்யாரிடம்,

"இங்க வந்துட்டுப் போறதுக்கு...ஒங்களுக்கு என்ன செலவாகும்?" "300 ரூவா ஆகும் பெரியவா"

"இவர் கைல 300 ரூவா குடு.." அந்த குஜராத்திக்காரரிடம் சொன்னதும், அவருக்கோ இதை பெரிய பாக்யமாக எண்ணி பரம ஸந்தோஷம்!

பெரியவாளுக்கு கோவில் குருக்கள், ஶிவாச்சார்யாகள் ஆகியோரின் க்ஷேமத்தில் மிகுந்த கருத்து உண்டு. துர்க்கையின் தலைச் சுமையோடு, ஶிவாச்சாரியாரின் மனச்சுமையையும் போக்கி விட்டார்! இல்லாவிட்டால்,

இப்படியொரு வழிகாட்ட, யாரால் முடியும்? பெரியவாளைத் தவிர....

பெரியவா சரணம்!

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...