Showing posts with label ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம். Show all posts
Showing posts with label ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம். Show all posts

Saturday, June 6, 2020

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

உமா

இக்கால ஆராய்ச்சியாளர்களில் ரொம்பப் பேர், ‘புராண காலத்தில்தான் பரமேசுவரன், பார்வதி, விஷ்ணு, பிள்ளையார் முதலிய தேவதா ரூபங்கள் ஏற்பட்டன. புராணங்களுக்கு முற்பட்ட உபநிஷத்துகளில் இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. அரூபமான ஞான தத்துவத்தை மட்டும்தான் உபநிஷத்துக்கள் சொல்கின்றன, என்கிறார்கள்.

ஆனால் கேநோபநிஷத்திலோ, ‘ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்’ என்று பரம ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.

‘ஸ்திரீ’, ‘ஹைமவதி’, ‘உமா’ என்பதெல்லாம் உபநிஷத்து மூலத்திலேயே வருகிற வார்த்தைகள். பிரம்மம் யக்ஷமாக நின்ற அதே ஆகாசத்தில், மகா சோபையோடு இவள் நின்றாள் என்கிறது. இரண்டுமே ஒன்றே என்பது உட்பொருள்.

‘ஸ்திரீ’ என்று சொன்னதால் ஆண், பெண் கடந்த அரூப தத்துவத்தை மட்டுமே உபநிஷத்துக்குள் தெய்வமாகக் கொண்டிருந்தன என்று சொல்வதை நிராகரித்ததாக ஆகிறது. அவளை ‘உமா’ என்று சொன்னதோடு நில்லாமல் ‘ஹைமவதி’ என்றும் சொன்னதால் ஹிமவானின் புத்திரியாக அவள் அவதரித்த விருத்தாந்தமும் உபநிஷத் காலத்திலேயே வழக்கிலிருந்ததாக ஏற்படுகிறது. (ஹிமவானின் புத்திரி ஹைமவதி; பர்வத ராஜனின் புத்திரி பார்வதி).

‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்’காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள்.

‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. ‘உ’ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ‘ம’ ஸம்ஹாரம்; ஈச்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள்.

அ-உ-ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உ-ம-அ என்ற இருக்கின்றன அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’விலோ ஸ்திதி [பரிபாலன] பீஜமான ‘உ’என்பது முதல் எழுத்தாயிருப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல்லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது.

ப்ரணவத்தில் ‘உ’ விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’ என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 126 / நாமம் 633–  உமா – உமா என்கிற பெயர் உடையவள்; பரமசிவன் பத்னி

பெரியவா சரணம்!

Monday, April 20, 2020

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம் ஸர்வமங்களா

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்
ஸர்வமங்களா
அம்பாளை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கக்கூடிய ச்லோகம் அவளை ஸர்வமங்களா என்று சொல்லித்தான் ஆரம்பிக்கிறது.



ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே |
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே ||
விக்நேச்வரரின் அநேக ஆவிர்பாவங்களைக் குறித்த கதைகளில் ஒன்றின்படி அவருடைய ஒரிஜினல் (original) ரூபம் நர ரூபம்தான். அம்பாள் தன்னுடைய அந்தஃபுரத்திற்கு ஒரு காவலாள் ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்று நினைத்தாள்.
தன்னுடைய திவ்ய சரீரத்தையே வழித்து அதிலிருக்கிற மஞ்சள் பொடி, குங்குமம், வாஸனைப் பொடி முதலானதுகளைத் திரட்டிப் பிசைந்து ஒரு பாலனாக ரூபம் பண்ணி அதற்கு உயிரும் கொடுத்துக் காவலாக வைத்து விட்டாள். மநுஷ்யர் மாதிரி (தேவர் மாதிரியுந்தான்) கண், காது, மூக்கு, நாக்கு முதலானவை உள்ள ரூபமே அது. அதாவது நரமுக ரூபம்தான்.
பிள்ளையார் என்றே பெயர் பெறப்போகிற அந்தப் பிள்ளையை - தன் உடம்பிலிருந்து தானே வழித்துப் பெற்ற அருமைப் பிள்ளையை - அம்பாள் காவல் வைத்துவிட்டு ஸ்நானத்துக்குப் போனாள். அம்பள் ஸர்வ மங்களா. அவள் தன்னுடைய மங்கள சரீரத்திலிருந்து மங்கள வஸ்துவான மஞ்சள் பொடியை வழித்து மூலப் பிள்ளையாரை ஸ்ருஷ்டித்ததால்தான் இன்றைக்கும் எந்த சுப ஆரம்ப கார்யத்தின் ஆரம்பத்திலும் மஞ்சள் பொடியைப் பிள்ளையாராக பிடித்து வைத்துப் பூஜை செய்கிறோம்.
மஞ்சள் என்பதே மங்கள கணபதியிலிருந்து வந்திருப்பதுதான். இங்கே, அங்கே என்பதைச் சில பேர் இஞ்சே, அஞ்சே என்று சொல்கிறார்களல்லவா? இலக்கணத் தமிழிலேயே தூங்கல் என்பது துஞ்சல் என்றும் வருகிறது. அப்படி மங்கள என்பதே மஞ்சள் ஆகியிருக்கிறது. ஸம்ஸ்கிருதத்தில் மங்களம் என்பதற்கு மஞ்சள் என்று ஒரு அர்த்தம்.
[ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 52 / நாமம் 200 – ஸர்வமங்களா = ஸர்வ மங்கள ரூபிணி]
பெரியவா சரணம்!

Sunday, February 9, 2020

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

விமர்ச-ரூபிணி

ஆசார்யாளைப் பற்றி சொல்வதுண்டு: "அந்த: சாக்தோ, பஹி: சைவ:, வ்யாவஹாரே து வைஷ்ணவ:" என்று.

உள்ளுக்குள்ளே சக்தி-அம்பிகையான பராசக்தி.

வெளியிலே ரூபத்தைப் பார்த்தால் வெள்ளை வெளேரென்று, விபூதியும் ருத்ராக்ஷமுமாகப் ‘பரமசிவனே வந்திருக்கிறானோ?’ என்று நினைக்கும்படியாக.

லோக வ்யவஹாரம் ஓயாமல் ஓடி ஆடிப் பண்ணிக்கொண்டிருப்பதிலோ விஷ்ணுவாகவே இருக்கிறார். வாயாலே ஆசீர்வாதம் பண்ணுவதும் “நாராயண, நாராயண” என்று தான்! ஸ்ரீமுகம் கொடுப்பதெல்லாம் “க்ரியதே நாராயண ஸ்ம்ருதி:” என்று விஷ்ணு ஸ்மரணையோடுதான்!

சிவாவதாரம்! செய்வதெல்லாம் நாராயணன் பேரில்! இப்படி சிவ-விஷ்ணு அத்வைதம்!

விஷ்ணுவை வ்யவஹார சக்தி, க்ரியா என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தம்? அவர் அம்பாளே என்று தான் அர்த்தம்!

புருஷ ரூபத்தில் அவதாரமாதலால் அம்பாளின் புருஷ ரூபமான நாராயணனின் பெயரிலேயே எல்லாக் கார்யமும் செய்தார். வெளியிலே காட்டாமல் உள்ளுக்குள்ளே அம்பாள் ஸ்வரூபம். அதாவது ஹ்ருதயத்திலே தாயாராகப் பரம கருணை!

அதுதான் "அந்த: சாக்த:". சக்தி, சக்தி என்றால் அந்தக் கருணைதான். அது இல்லாமல் சிவம் இல்லை. சிவம் தானிருப்பதாகத் தெரிந்து கொள்ளவே ஒரு சக்தி இருக்கத்தானே வேண்டும்?

சிவம் தன்னையே கருணையாக வெளிப்படுத்திக் கொள்வதும் சக்தி தான். அவளுடைய ‘விமர்ச’மில்லாமல் இவருடைய ‘ப்ரகாசம்’ லோகத்துக்கு ஏற்படவே முடியாது என்று தத்வ ரீதியில் சொல்வார்கள்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 112 / நாமம் 548 – விமர்ச-ரூபிணி - (அர்த்தத்தின் வடிவம் / ஞானத்தின் ஸ்வரூபம்)

பெரியவா சரணம்!

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...