Saturday, June 6, 2020

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

உமா

இக்கால ஆராய்ச்சியாளர்களில் ரொம்பப் பேர், ‘புராண காலத்தில்தான் பரமேசுவரன், பார்வதி, விஷ்ணு, பிள்ளையார் முதலிய தேவதா ரூபங்கள் ஏற்பட்டன. புராணங்களுக்கு முற்பட்ட உபநிஷத்துகளில் இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. அரூபமான ஞான தத்துவத்தை மட்டும்தான் உபநிஷத்துக்கள் சொல்கின்றன, என்கிறார்கள்.

ஆனால் கேநோபநிஷத்திலோ, ‘ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்’ என்று பரம ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.

‘ஸ்திரீ’, ‘ஹைமவதி’, ‘உமா’ என்பதெல்லாம் உபநிஷத்து மூலத்திலேயே வருகிற வார்த்தைகள். பிரம்மம் யக்ஷமாக நின்ற அதே ஆகாசத்தில், மகா சோபையோடு இவள் நின்றாள் என்கிறது. இரண்டுமே ஒன்றே என்பது உட்பொருள்.

‘ஸ்திரீ’ என்று சொன்னதால் ஆண், பெண் கடந்த அரூப தத்துவத்தை மட்டுமே உபநிஷத்துக்குள் தெய்வமாகக் கொண்டிருந்தன என்று சொல்வதை நிராகரித்ததாக ஆகிறது. அவளை ‘உமா’ என்று சொன்னதோடு நில்லாமல் ‘ஹைமவதி’ என்றும் சொன்னதால் ஹிமவானின் புத்திரியாக அவள் அவதரித்த விருத்தாந்தமும் உபநிஷத் காலத்திலேயே வழக்கிலிருந்ததாக ஏற்படுகிறது. (ஹிமவானின் புத்திரி ஹைமவதி; பர்வத ராஜனின் புத்திரி பார்வதி).

‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்’காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள்.

‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. ‘உ’ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ‘ம’ ஸம்ஹாரம்; ஈச்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள்.

அ-உ-ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உ-ம-அ என்ற இருக்கின்றன அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’விலோ ஸ்திதி [பரிபாலன] பீஜமான ‘உ’என்பது முதல் எழுத்தாயிருப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல்லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது.

ப்ரணவத்தில் ‘உ’ விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’ என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 126 / நாமம் 633–  உமா – உமா என்கிற பெயர் உடையவள்; பரமசிவன் பத்னி

பெரியவா சரணம்!

No comments:

Post a Comment

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...