Wednesday, July 1, 2020

#mahan #periyava #periva அரிசி வாங்கலியோ...அரிசி! | Periyava Charanam

அரிசி வாங்கலியோ...அரிசி!
---------------------------------------------

அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி விற்பார்கள். மக்களும் தெருவில் வரும் வியாபாரியிடம் பேரம் பேசி வாங்குவர்.

ஒருநாள் வியாபாரி ஒருவர் தெருவில் அரிசி விற்றுச் சென்றார். அவரின் சத்தம் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்த இடம் வரை தெளிவாகக் கேட்டது. பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமிகள். வரிசையில் மெல்ல நடந்து வந்தாள் மூதாட்டி ஒருவர்.

அவர் காது கேட்காததால், வலதுகையால் செவி மடலைக் குவித்தபடி மற்றவர் பேச்சைக் கேட்டார். இந்நிலையில் சுவாமிகளை வணங்கி, ''பெரியவா...! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?'' என்றார்.

சுவாமிகள் தீர்த்தம் வழங்கியபடி, ''தெருவில் அரிசி வியாபாரி கூவிக் கூவிச் சொல்கிறாரே? அதன்படி நடந்து கொள்!'' என்றார் சிரித்தவாறே.
மூதாட்டிக்கு புரியவில்லை. அருகில் நின்றவர்களுக்கும் புரியவில்லை.
''என்ன! சொல்றது புரியலையா?'' எனக் கேட்டார் சுவாமிகள்.

''எப்போதும் 'ஹரி' 'சிவ' நாமத்தையும் ஜபித்தால் போதும். துக்கமெல்லாம் விலகும். மனதில் நிம்மதி பிறக்கும். அரிசி வியாபாரி என்ன சொல்லிக் கூவுகிறார் தெரியுமோ? 'அரிசி வாங்கலியோ... அரிசி' என்று தானே கூவுகிறார்? யோசித்தால் புரியும். அரியும், சிவாவும் இருக்குமிடத்தில் எல்லா மங்கலங்களும் உண்டாகும். இத்திருநாமங்களை ஜபித்தால் பாவம் தொலையும். 'அரிசி வாங்கலியோ' என்பதைக் கேட்கிற போது வயிற்று ஞாபகம் வந்தால் மட்டும் போதாது. ஆன்மாவின் ஞாபகமும் நமக்கு வர வேண்டும். வயிற்றுப் பசிக்கு அரிசியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஆன்மாவின் பசிக்கு அரி, சிவ நாமங்களை இடைவிடாது நாம் ஜபிக்க வேண்டும்!''

சுவாமிகளின் சிலேடையான பேச்சைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்தனர்.

மகா பெரியவா சரணம்.

Saturday, June 6, 2020

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

உமா

இக்கால ஆராய்ச்சியாளர்களில் ரொம்பப் பேர், ‘புராண காலத்தில்தான் பரமேசுவரன், பார்வதி, விஷ்ணு, பிள்ளையார் முதலிய தேவதா ரூபங்கள் ஏற்பட்டன. புராணங்களுக்கு முற்பட்ட உபநிஷத்துகளில் இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. அரூபமான ஞான தத்துவத்தை மட்டும்தான் உபநிஷத்துக்கள் சொல்கின்றன, என்கிறார்கள்.

ஆனால் கேநோபநிஷத்திலோ, ‘ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்’ என்று பரம ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.

‘ஸ்திரீ’, ‘ஹைமவதி’, ‘உமா’ என்பதெல்லாம் உபநிஷத்து மூலத்திலேயே வருகிற வார்த்தைகள். பிரம்மம் யக்ஷமாக நின்ற அதே ஆகாசத்தில், மகா சோபையோடு இவள் நின்றாள் என்கிறது. இரண்டுமே ஒன்றே என்பது உட்பொருள்.

‘ஸ்திரீ’ என்று சொன்னதால் ஆண், பெண் கடந்த அரூப தத்துவத்தை மட்டுமே உபநிஷத்துக்குள் தெய்வமாகக் கொண்டிருந்தன என்று சொல்வதை நிராகரித்ததாக ஆகிறது. அவளை ‘உமா’ என்று சொன்னதோடு நில்லாமல் ‘ஹைமவதி’ என்றும் சொன்னதால் ஹிமவானின் புத்திரியாக அவள் அவதரித்த விருத்தாந்தமும் உபநிஷத் காலத்திலேயே வழக்கிலிருந்ததாக ஏற்படுகிறது. (ஹிமவானின் புத்திரி ஹைமவதி; பர்வத ராஜனின் புத்திரி பார்வதி).

‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்’காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள்.

‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. ‘உ’ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ‘ம’ ஸம்ஹாரம்; ஈச்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள்.

அ-உ-ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உ-ம-அ என்ற இருக்கின்றன அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’விலோ ஸ்திதி [பரிபாலன] பீஜமான ‘உ’என்பது முதல் எழுத்தாயிருப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல்லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது.

ப்ரணவத்தில் ‘உ’ விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’ என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 126 / நாமம் 633–  உமா – உமா என்கிற பெயர் உடையவள்; பரமசிவன் பத்னி

பெரியவா சரணம்!

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...