Thursday, April 9, 2020

பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!


மஹா பெரியவா அற்புதங்கள்

பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!

பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார்.

ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் மாதிரி!

மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்?

அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்………..” நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே!

அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?” கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.

பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?

ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார்.

அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்யலேன்னா.?

பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா!

அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ……….” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…………மழை வருகிறதா? என்று பார்க்க!பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………

ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”

சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!

அன்று அந்த விதண்டாவாதி, ஒன்று ....மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது?
ஆனால், நிச்சயம் ஒன்று நடந்திருக்கும்.

அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்!

பக்தன் தன் மேல் கொண்ட த்ருட விஸ்வாசத்தால் க்ஷணத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, பெரியவா இயற்கையையே இசைய வைத்துள்ளார் என்றால், பகவானுக்கு பக்தன் மேல் உள்ள அன்பை என்னவென்று சொல்லுவது?

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

No comments:

Post a Comment

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...