பசுவிற்கு கிடைத்த பாக்கியம்
பெரியவாளுக்கு கொஞ்சம் உடம்பு சரியாக இல்லை. எந்த மோசமான உடல் உபாதையிலும் அவர் ஒருநாள் கூட தன் அனுஷ்டானங்களை விட்டார் என்பதில்லை; பூஜையை விட்டார் என்பதில்லை; ஏதோ சுருக்கமாக பூஜையை முடித்தார் என்பதும் இல்லை. நாமோ, "ஹச்"சென்று ஒரு தும்மல் வந்துவிட்டால் கூட, ஏதோ பெரிய வ்யாதி வந்த மாதிரி, குளிக்கக் கூட யோஜிப்போம்.
1945ல் பெரியவாளுக்கு ஹார்ட்டில் கோளாறு உண்டானது. மயிலாப்பூர் டாக்டர் T N கிருஷ்ணஸ்வாமி ஐயர் வந்து வைத்யம் பண்ணினார். பெரியவா கொஞ்ச நாள் பேசாமல் அவர் சொன்னதை கேட்டுக்கொண்டாலும், தான் பாட்டுக்கு "சிவனே" என்று தன் கார்யங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் டாக்டரிடம்,
"நீ குடுக்கற அலோபதி வைத்யம் போறும்..." என்று நிறுத்திவிட்டு, பாரிஷதர் ஒருவரிடம் "மேலகரம் கனபாடிகளை அழைச்சிண்டு வா!" என்று உத்தரவிட்டார்.
கனபாடிகளைப் பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் அவரிடம் உள்ள வேதம்; அதோடு வைத்யம், ஜோஸ்யம் எல்லாம் அவருக்கு கை வந்த கலை! அவர் வந்தால் பெரியவா நேரம் போவது தெரியாமல் அவரோடு நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவார்.
கனபாடிகள் வந்து பட்டுத் துணி போர்த்தி, பெரியவாளுடைய நாடியைப் பார்த்தார்.
"ஒரு பஸுவுக்கு தெனோமும் நாகமரத்தோட தழையை [இலை] மட்டும் ஆகாரமாக் குடுக்கணும். பெரியவாளுக்கு, அந்த பஸுவோட பாலை மட்டும் குடுக்கணும்" என்றார்.
"செரியாப் போச்சு! எனக்கு ஒடம்பு செரியாகணுங்கறதுக்காக ஒரு பஸுமாட்டைக் கஷ்டப்படுத்தலாமா? நாகத் தழை மட்டும் அதுக்கு எப்டிப் போறும்? கோஹத்தி தோஷம் வந்துட்டா என்ன பண்றது?..."
ரொம்ப கவலையோடு கேட்டார்.
(பஸுவுக்கு ஒரே மரத்தின் இலையை ஆஹாரமாகப் போடுவதையே பெரியவா கோஹத்தி என்றால், அன்றாடம் அந்த மஹாமாதாவை பாலுக்காகவும், மாம்ஸத்துக்காகவும், தோலுக்காகவும் கொடூரமாக வதைக்கும், வதைக்க அனுப்பும், மற்றும் அதோடு தொடர்பு கொண்ட மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மிருகங்களின் "கோஹத்தி" தோஷம் சித்ரகுப்தனுக்கும் எழுத முடியாத அளவு இருக்கும்.)
அதற்குள் பாரிஷதர்கள் "பஸுவை பட்னி போடலியே பெரியவா! நாக எலையை நெறைய போடலாம்..." என்று எதையோ சொல்லி, பெரியவாளை சம்மதிக்க வைத்தனர்.
பெரியவாளுக்கென்றே தன் உதிரத்தைப் பாலாக்கி பிக்ஷையாகக் குடுக்க அந்த கோமாதா செய்த பாக்யந்தான் எப்பேர்ப்பட்டது! பஸுவே ப்ரத்யக்ஷ தெய்வம். அவள் பாலமுதளித்து தெய்வத்துக்கே அம்மாவானாள்!
ஜம்மென்று நாகத் தழையைத் தின்று கொண்டு, நல்ல தண்ணீரைக் குடித்துக் கொண்டு சௌக்யமாக இருந்தாள் அந்த அம்மா! பெரியவாளும் அவள் தந்த பாலை மட்டுமே பிக்ஷையாக ஏற்று, மூன்று கால பூஜை, தர்சனம் என்று சௌக்யமாக இருந்தார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த பாரிஷதர்கள், பக்தர்கள் சிலர்,
"என்னத்துக்கு நமக்கெல்லாம் இந்த தண்டமான மனுஷ ஜன்மா, ஒண்ணுத்துக்கும் உபயோகமில்லாம? இந்தப் பஸுவா பொறந்திருந்தா.... இந்த ஜன்மா கடைதேறியிருக்குமே! பெரியவாளோட பிக்ஷைக்கு பாலைக் குடுக்க இந்தப் பஸு
என்ன புண்யம் பண்ணித்தோ !.." என்று மனமுருகினார்கள்.
கொஞ்சநாளில் "குழந்தை" உம்மாச்சி தாத்தா தாயாரின் கவனிப்பினால், சொஸ்தமானார்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!