Thursday, April 9, 2020

சீதாப்பழம் குடுக்காம போறியே? #periyava #periyavaa #mahaperiyavaa,

சீதாப்பழம் குடுக்காம போறியே?

மகா பெரியவாளைத் தரிசிக்கும்போது வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக குசேலர் அவல் கோண்டு போன மாதிரி ஒரு சீதாப்பழம் கொண்டுபோன ஏழைப் பாட்டி.

ஒரு விள்ளல் சீதாப்பழம் சாப்பிட்டு,பாட்டிக்கு பூரிப்பை ஏற்படுத்திய மகா பெரியவா.

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.புத்தகம்-பெரியவா பெரியவாதான்.
(சற்று சுருக்கப்பட்டுள்ளது)


மகா பெரியவாளின் அனுக்ரஹத்துக்கு உள்ளான இன்னொரு பெண்மணி. பெயர் - சுந்தா சுந்தரம்.

காஞ்சிப் பெரியவா மீது அப்படி ஒரு பக்தி. காஞ்சி சென்று மகா ஸ்வாமிகளின் தரிசனம் பெற்று, அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைப்பார். மகா பெரியவாளின் திருச்சந்நிதியின் எதிரே அமர்ந்து வெகு நேரம் தரிசித்துக் கொண்டிருப்பார்.

எப்போது காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு மகா பெரியவாளின் தரிசனத்துக்குச் சென்றாலும், ஒரு கூடை ரோஜா மலர்களைக் கொண்டு செல்வது சுந்தா சுந்தரத்தின் வழக்கம்.

வழக்கம்போல் ஒரு நாள் கூடை நிறைய புத்தம் புது ரோஜாப் பூக்களை வாங்கிக்கொண்டு காஞ்சி ஸ்ரீ மடத்துக்குப் போனார். அன்றைய தினம், சுந்தா சுந்தரத்துடன் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பாட்டியும் சென்றிருந்தார். மகா பெரியவாளைத் தரிசிக்கும்போது, வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக, குசேலர் அவல் கொண்டு போன மாதிரி, ஒரு சீதாப்பழத்தை எடுத்து வைத்திருந்தார்.

மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். ஆளாளுக்குக் கையில் ஒரு மூங்கில் தட்டில் ஆப்பிள், வாழைப்பழம்,மாம்பழம் என்று விதம் விதமான -காஸ்ட்லியான பழங்களை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.

தரிசனம் செல்லும் வரிசையை சீர் செய்து கொண்டிருந்த மடத்து சிஷ்யர் ஒருவர், இந்தப் பாட்டியின் கையில் இருந்த சிறிய சீதாப்பழத்தைப் பார்த்து விட்டு, ' பாட்டி… இது மாதிரி பழங்களை எல்லாம் பெரியவாளுக்குக் கொடுக்கக் கூடாது. கொடுத்தாலும், அவர் ஏத்துக்க மாட்டார்.இதைக் கொடுத்துடாதீங்கோ நீங்க கொடுக்கலேன்னா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது…சாதாரணமா ஒரு நமஸ்காரம் மட்டும் பண்ணிட்டுப் போங்கோ' என்று சற்று அலட்சியமாகச் சொன்னான்.

இதைக் கேட்ட பாட்டியின் மனம் வருந்தியது.தன் சக்திக்கு ஏற்ற மாதிரி எதையாவது பெரியவாளுக்கு, அர்ப்பணிக்கலாம் என்று வந்தால் 'கூடாது' என்று தடுக்கிறானே…ஒருவேளை மகாபெரியவா இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டாரோ? என்று யோசித்து, அந்த சீதாப்பழத்தை எவரும் அறியா வண்ணம் தன் முந்தானையில் இறுக்கமான மனதுடன் முடிந்து கொண்டார்.

சுந்தா சுந்தரத்தின் முறை வந்தது. தான் காணிக்கையாகக் கொண்டு வந்த மூங்கில் தட்டை, பெரியவாளுக்கு சமர்ப்பித்துவிட்டு,பிரசாதம் பெற்று திருப்தியுடன் நகர்ந்தார்

அடுத்து சீதாப்பழ பாட்டியின் முறை.

கைகளைக் குவித்து மகா பெரியவாளை வணங்கி, அதன் பின் கன்னத்தில் போட்டுக் கொண்டு ஒரு நமஸ்காரம் செய்து, பிரசாத்துக்காக கையை நீட்டினார்.

மகா பெரியவா பிரசாதம் கொடுக்கவில்லை.


'பிரசாதம் தாங்கோ பெரியவா' என்று கேட்டார் பாட்டி..

புன்னகையுடன் பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார் திரிகால ஞானியான மகா பெரியவா.

தன் தரிசனம் முடிந்ததால் சுந்தா சுந்தரம் சற்றே விலகி நிற்க, அவருடன் வந்த பாட்டி, மகா பெரியவாளின் அருகே வந்து கையெடுத்துக் கும்பிட்டு நின்று கொண்டிருந்தார். கண்கள் பணிக்க அந்த தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் சில விநாடிகளுக்கு பிறகு பிரசாதம் வேண்டித் தன் இரு கைகளையும் ஒரு நடுக்கத்துடன் பெரியவாளை நோக்கி நீட்டினார்.

ஆனால்,மகா பெரியவா பிரசாதம் கொடுக்கவில்லை.'மொதல்ல நீ கொண்டு வந்த பழத்தை எங்கிட்ட கொடு,அப்புறமா பிரசாதம் தர்றேன்' என்று சிரித்தார்.

பாட்டி தவித்துப் போனார். பெரியவா என்ன பழத்தைக் கேட்கிறார் என்பது புரியவில்லை. காரணம் எவருக்குமே தெரியாத வண்ணம் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் சீதாப்பழம் மகா பெரியவாளுக்கு எப்படித் தெரியும் என்கிற சந்தேகம்தான். எனவே பெரியவா இதைத்தான் குறிப்பிட்டுக் கேட்கிறார்' என்று தீர்மானித்து சீதாப்பழத்தைச் சட்டென்று எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை பாட்டிக்கு.

அதோடு, பெரியவாளைத் தரிசிப்பதற்காக இந்தப் பாட்டி வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது ஒரு சிஷ்யன் பாட்டியிடம் வந்து சொல்லி விட்டானே - பெரியவாளுக்கு சீதாப்பழம் பிடிக்காது..அதைக் கொடுத்துடாதீங்கோ' என்று.இந்த வாசகம்தான் பாட்டியின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. எனவே, 'பெரியவாளுக்குப் பிடிக்காது என்று சொல்லி விட்டான்.அதனால் தப்பித் தவறியும் இதைக் கொடுத்து பெரியவாளின் அபசாரத்துக்கு ஆளாகி விடக் கூடாது' என்று தீர்மானமாக இருந்தார் பாட்டி.

ஆனால்,அந்தப் பரப்பிரம்மம் விடுமா? தனக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டு இந்தப் பாட்டி இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அவர்?.

'எங்கே, நீ கொண்டு வந்த சீதாப்பழம்? அதைக் கொடு மொதல்லே,எனக்காகத்தானே கொண்டு வந்தே?' என்று பட்டவர்த்தனமாக, புன்னகை விலகாமல் பாட்டியைப் பார்த்துக் கேட்டே விட்டார்.

இனியும் பெரியவாளிடம் ஏதாவது பேசி சமாளிக்க முடியாது. வாயைத் திறந்து சீதாப்பழம் கொடு என்று கேட்டு விட்டார்.எனவே, புடவை முந்தானையில் இருந்து அதை எடுத்துத் துடைத்துக் கொடுத்தார்.

சீதாப்பழம் பாட்டியிடம் இருந்து, மகா பெரியவாளுக்கு மாறியது. அந்த சீதாப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டுமோ, அந்த முறையில் பக்குவமாக ஒரு துளி எடுத்துச் சாப்பிட்டார் மகாபெரியவா. இதை நேருக்கு நேர் காணும் பாக்கியம் பெற்ற பாட்டி சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்.

பிறகு பாட்டியைப் பார்த்து,' ஆசையோட நீ கொண்டு வந்த சீதாப்பழத்தை ஒரு விள்ளல் எடுத்து ஒன் கண் முன்னாலயே போட்டுண்டுட்டேன்,பார்த்தியா' என்று சொல்லி பெரிதான ஒரு சிரிப்பு சிரித்து,'இப்ப தர்றேன் ஒனக்குப் பிரசாதம் வாங்கிக்கோ' என்று பிரசாதத்தை நீட்டினார்,மகா பெரியவா.

சுந்தா சுந்தரமும்,பாட்டியும் மீண்டும் ஒரு முறை மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, அங்கிருந்து பூரிப்புடன் வெளியே வந்தனர்.

இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் - பல லக்ஷதீபம் போட்டிருக்காள்."-பெரியவா



'இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் - பல லக்ஷதீபம் போட்டிருக்காள்…'-பெரியவா

'ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.லட்சதீபம் போட்டிருக்கேன்' என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் பேசிய பெரிய மனிதருக்கு பெரியவாளின் பதில் மேலே

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஓர் ஏழைப் பாட்டி, பெரியவாளிடம் அபார பக்தி. கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும் சிக்கனமாக வாழ்க்கையைக் கழித்து கொண்டிருந்தாள்.மடி,ஆசாரம் பார்ப்பாள் ஏராளமான பக்தி.

தினமும் பெரியவா இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வாள்.கோலம் போடுவாள். தீபம் ஏற்றி வைப்பாள்.

இரண்டு புடவைகள் தான் அவளுடைய ஆஸ்தி.இன்னொரு புடவை வாங்கக் கூட அந்தப் பாட்டியிடம் பொருளில்லை

ஒரு பக்தர், அரிசிக் குறுணையும்,வெல்லமும் பெரியவாளிடம் சமர்ப்பித்திருந்தார். அவற்றை நல்லபடியாக.
விநியோகம் செய்ய வேண்டுமே?

பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்.

'காஞ்சீபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுகளிலேயும், கொஞ்சம்,கொஞ்சம் போட்டுட்டு வா.அரை ஆழாக்கு வீதம் போடு…' என்றார்கள்.

அந்தப் பாட்டியும்,பக்தி சிரத்தையுடன் அலைந்து திரிந்து, பல எறும்புப் புற்றுகளில் அரிசிக் குறுணையும், வெல்லமும் போட்டு விட்டு வந்தாள்.

அந்த வேலை முடிந்ததும்,பெரியவா அந்தப் பாட்டியைக் கூப்பிட்டார்கள்.

பெரிய மாலை போலத் திரிநூல் இருந்தது. ஒரு டின் நிறைய எண்ணெய் இருந்தது.

'திரிநூலை கட் பண்ணி ஒவ்வொரு கோயிலுக்காகப் போய்,எவ்வளவு விளக்குக்குப் போட முடியுமோ, அவ்வளவுக்குப் போடு. ஒவ்வொரு நாளும் இரண்டு,மூன்று கோயில்களுக்குப் போய் விளக்கேற்றினாலும் போதும்' என்றார்கள் பெரியவா.

பாட்டிக்கு பரம சந்தோஷம்.பரம சிரத்தையுடன் நாள் தோறும் சில கோயில்களுக்குச் சென்று,பெரியவா உத்தரவை நிறைவேற்றி வந்தாள். சில நாட்களில் இந்தக் கைங்கர்யம் நிறைவு பெற்றது. அந்தச் செய்தியையும் பெரியவாளிடம் தெரிவித்தாள் பாட்டி

பாட்டியின் பணிகள் முடிந்த சில நாட்களுக்குப் பின் ஒரு பெரிய மனிதர், ஆடம்பரமாக மடத்துக்கு வந்தார். பெரிய மனுஷத் தோரணை,அகங்காரம்

'ஸஹஸ்ர போஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.லட்ச தீபம் போட்டிருக்கேன்..' என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவாளுக்கு அவருடைய அகம்பாவம் புலப்பட்டது. தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதைப் பற்றி பேசிக் கொள்வது புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.

வினயத்துடன் சொல்லியிருந்தால் பெரியவா சந்தோஷப்பட்டிருப்பார்கள்.ஆனால்,அந்தப் பெரிய மனிதர் அகம்பாவத்துடன் பேசினார்.

பெரியவா சொன்னார்கள்.

'இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள். பல லக்ஷதீபம் போட்டிருக்காள்.

ஆணவப் பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது. யார் அந்தப் பாட்டி…அவ்வளவு பெரிய பணக்காரி?' என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பிறந்தது.

பெரியவா அந்தப் பாட்டியை அழைத்து வரச் சொன்னார்கள்.

இவள் தான் அவ்வளவு பெரிய உத்தமமான காரியம் செய்தவள்.

அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர் அயர்ந்து போனார். பாட்டியின் நெற்றியிலிருந்த வெள்ளை வெளேரென்ற திருநீற்றுப் பூச்சு, அவளுடைய இதய சுத்தத்தை விளக்கினாற்போலிருந்தது.

பெரியவா சொன்னார்கள்.

'ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார். பிரும்மா முதல் பிபீஸிகம் (ஏறும்பு) வரை பகவான் இருக்கிறார். மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.

'நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய். ஆனால் இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு (எறும்புகளுக்கு) .ஆகாரம் போட்டிருக்கிறாள்…,..

'ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட , நீ திரவியம் கொடுத்திருக்கே . லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் - திரி போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது. இந்தப் பாட்டி, பல கோயில்களுக்குப் போயிருக்கிறாள்.பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி,எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தன் கையாலேயே தீபம் ஏற்றியிருக்கிறாள்…'

கேட்டுக் கொண்டிருந்த பிரமுகர் தலைகுனிந்தார்.

பெரியவாளிடம் பவ்யமாகவும்,அகங்காரமில்லாமலும் பேச வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். பின்னால் பல பக்தர்கள் வந்து நிற்பதைப் பார்த்து சற்றே நகர்ந்து இடம் கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து, பெரியவாளே அந்தப் பெரிய மனிதரைக் கூப்பிட்டு, உட்கார வைத்து, பல சமாசாரங்கள் பேசி, பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...