"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே... அவர் எங்கே போயிருக்கார்?"
சந்யாசியைத் தேடிய சம்சாரி
"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா"
என்று பெரியவா சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
எளிமைக்கு
இது ஓர் எடுத்துக்காட்டு
கட்டுரையாளர் : ரா.வேங்கடசாமி
தட்டச்சு : வரகூரான்
நாராயணன்.
அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு
நோயாளி.அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக
அலைந்தார்கள்.
இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர்
ஒருவர். மகானின் பக்தர். "கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மகானிடம் ஒரு
தடவை சென்று தரிசித்தபின் அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா...
உன்
சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்"- என்று யோசனை சொன்னார்.
அப்போதிலிருந்து அவரது மனதில் "காஞ்சி மகானைப் பார்க்க வேண்டும்" என்கிற
எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.
தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர்
செல்லும்போது காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே,காஞ்சியில் இறங்கி
யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது.
"உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக
நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப்
பார்ப்பது" என்கிற எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச்
சென்று கொண்டு இருந்தார்.
இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ..ஆரவாரமோ
ஏதும் தென்படவில்லை. "அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார்
போலிருக்கிறது" என்று இவர் நினைத்துக் கொண்டார்.
தனக்கு விடிவுகாலம் பிறக்க
அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.
யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள்
தேடியபோது,ஒரு பெரியவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார். வந்தவர்
அவரிடம் கேட்டார். "இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே...அவர் எங்கே
போயிருக்கார்?"
"அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?"
இந்தக்
கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை
ஏற்படுத்தின.
அதனால் வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது
ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே
இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.
"அவர்
கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?" கேள்வி
பிறந்தது.
அவருக்கு வந்தவரோ, 'இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு
கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார். வயதான பெரியவர் தொடர்ந்தார்.
"சிரமம்..சிரமம்னு சொல்றியே..அதை ஏன் நீ படறதா நினைக்கிறே..அந்தப் பாரம்
உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..."
இது எப்படி
சாத்தியம் என்று வந்தவருக்கு மனதில் சந்தேகம்.
"அது எப்படி சுவாமி?
நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு..
என் கஷ்டங்களை வேறு
யார் சுமப்பா?" வயதான பெரியவர் சிரித்தபடியே சொன்னார்.
"இப்போ ஊருக்குப்
போறோம்னு வையுங்க..உங்களோட பெட்டி,மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும்
சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்?
அப்ப என்ன பண்றோம்? யாராவது கூலியாள்
கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா?
அது போலத்தான் நாம படற
சிரமங்களை நம்மது இல்லே,பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி அடைஞ்சுட்டா
நமக்கு எந்த பாதிப்பும் வராது..
" இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம்
மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.
அவர் வயதான பெரியவரைப் பார்த்து,
"பெரியவரே இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு.
என்பாரம்
உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான்..
நீங்கள் சொல்ற மாதிரி
இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு
வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே.. எனக்கு உடனே மெட்ராஸ்
போயாகணும்...
காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது.
எனக்கு இன்னமும் நல்ல
காலம் வரலே போலத் தோணுது. ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக்கொஞ்சம்
இதமாக இருக்கு... ஆமா நீங்க யாரு? இதே ஊரா?"என்று கேட்டார்.
வயதான பெரியவர்
முகத்தில் சிரிப்பு.
"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று
சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி. வியப்போடு அந்த எளிமையின்
உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்...
மலைத்து நின்றார். அதுவரை
அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே
திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிசிக்க ஒரு பெருங்கூட்டமே
காத்திருந்தது.
இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாகப்பேசி,
அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார். "நமஸ்காரம்
பண்ணிக்கிறேன்" என்ற பக்தரை சட்டையை கழற்றும்படி சொன்னார் மகான்.
தான்
பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் யோசிக்க, மடத்து சிப்பந்தி
ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச்
செய்து ஆசிர்வதித்தார் மகான்.
யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம்
அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல்
விலகின.....
எளிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு
*****